சிம்பு நடிக்கவுள்ள 'மகாமாநாடு' படம் எப்போது தொடக்கப்படும் என்று தயாரிப்பாளர் டி.ஆர் பேட்டியளித்தார்.
சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படம் தயாராவதாகக் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. வெங்கட்பிரபு இயக்கவிருந்த இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தமானார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது.
நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்த இந்தப் படத்திலிருந்து, சில நாட்களுக்கு முன்பு சிம்பு நீக்கப்பட்டார். அவருகு பதிலாக வேறோரு நாயகனுடன் இந்தப் படம் உருவாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், 'மாநாடு' படத்துக்குப் போட்டியாக 'மஹா மாநாடு' என்ற படத்தை அறிவித்துள்ளார் சிம்பு. அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் உள்ளார். 'வல்லவன்', 'மன்மதன்' ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்துக்கு சிம்பு திரும்பியுள்ளார். இதனை தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார் டி.ராஜேந்தர்.
சிம்பு வெளிநாட்டில் இருப்பதால், இந்தப் படம் தொடர்பாக டி.ராஜேந்தரிடம் பேசிய போது, "சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களை விட, இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாராகிறது. இதன் பட்ஜெட் 120 கோடி வரை இருக்கும். பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். அனைத்தையுமே சிம்பு வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் அறிவிப்பார். ஆடி மாத இறுதியிலேயே வந்திருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் சிம்பு திரும்பிவிடுவார். 'மாநாடு' படத்துக்குப் போட்டி போன்ற சர்ச்சைகளுக்கு எல்லாம் சிம்பு தான் பதிலளிக்க வேண்டும். நான் பதிலளிப்பது சரியாக இருக்காது. மீண்டும் சிம்பு - டி.ஆர் சேருகிறோம். இதில் நான் தயாரிப்பாளர் மட்டுமே" என்று தெரிவித்தார் டி.ராஜேந்தர்.
இதற்கிடையில், ‘முஃப்தி’ கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. அவருடன் சேர்ந்து கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளது. இதனை முடித்துவிட்டு தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்துவார் சிம்பு என தெரிகிறது.