தமிழ் சினிமா

விஸ்வாசம் தொழில்நுட்பக் குழுவினருடன் உருவாகும் சூர்யா39

செய்திப்பிரிவு

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில், முற்றிலுமாக 'விஸ்வாசம்' தொழில்நுட்பக் குழுவினரே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

'விஸ்வாசம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவாவின் அடுத்த பட நாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இறுதியில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, சூர்யா நடிக்கும் படத்தை இயக்க சிவா ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களில் மிகவும் ரகசியம் காத்து வந்தது படக்குழு.

தற்போது முதன்முறையாக தொழில்நுட்பக் கலைஞர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இசையமைப்பாளராக இமான், ஒளிப்பதிவாளராக வெற்றி, எடிட்டராக ரூபன், சண்டைக்காட்சிகள் இயக்குநராக திலீப் சுப்பராயன் மற்றும் கலை இயக்குநராக மிலன் பணிபுரியவுள்ளனர்.

இவர்கள் அனைவருமே 'விஸ்வாசம்' படத்தில் பணிபுரிந்தவர்கள். அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், அப்படியே இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தக் குழுவினர் அனைவருமே சூர்யாவின் படத்தில் முதல் முறையாக பணிபுரிகிறார்கள்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தெரிகிறது. ஒரே கட்டமாக முடித்து, அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது படக்குழு.

SCROLL FOR NEXT