'சர்கார்' படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் தமிழில் கதைகள் மட்டுமே கேட்டு வந்தார். புதிதாக தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் மட்டுமே ஒப்பந்தமானார்.
தற்போது, அவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய தமிழ் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கவுள்ளார்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி, எடிட்டராக அனில் க்ரிஷ் என தொழில்நுட்பக் கலைஞர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது படக்குழு. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் கொடைக்கானில் தொடங்கவுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.