விஜய் சேதுபதி | படம்: எல்.சீனிவாசன் 
தமிழ் சினிமா

அக்கறை செலுத்தலாம் ஆளுமை செலுத்தக் கூடாது: 'மிஷன் காஷ்மீர்' தொடர்பாக விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

ஜனநாயகத்துக்கு எதிரானது என்று 'மிஷன் காஷ்மீர்' விவகாரத்தை காட்டமாக விமர்சித்துள்ளார் விஜய் சேதுபதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை இரு பிரிவாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் விருது வழங்கும் விழாவுக்குச் சென்ற விஜய் சேதுபதி, அங்குள்ள இணையத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு விஜய் சேதுபதி, “ஜனநாயகத்துக்கு எதிரானது. அந்தந்தப் பிரச்சினையை அந்த மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என பெரியார் சொல்லியிருக்கார்.

அந்த விஷயத்தில் மற்றவர்கள் எப்படி தலையிட முடியும்? அவர்கள் தான் அந்த வீட்டில் வாழ்கிறார்கள். மாதப் பட்ஜெட் என்ன, குழந்தைகள் தேவை எப்படி வாழப் போகிறோம் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

நான் அவர்கள் மீது அக்கறைச் செலுத்தலாம். ஆளுமை செலுத்த முடியாது. இரண்டுக்குமே வித்தியாசம் இருக்கிறது. அது அனைத்து இடத்துக்கும் பொருந்தும். ஈழத்துக்கும் அது பொருந்தும். கேள்விப்பட்ட விஷயத்தை வைத்துப் பேசலாம். ஆனால், அங்கு வாழ்பவர்களுக்குத் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

இந்த முடிவு முழுக்க முழுக்க மிகுந்த மனவருத்தத்தை அளிக்கக் கூடியது. வீட்டுச் சிறையில் இருக்கிறேன் என்று ஒரு செய்தியைப் பார்க்கிறேன். இந்த விஷயத்துக்குப் பெரியார் கருத்தே சரி. அக்கறை செலுத்தலாம், ஆளுமை செலுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

SCROLL FOR NEXT