தமிழ் சினிமா

உறுதியானது கே.வி.ஆனந்த் - அஜித் கூட்டணி

ஸ்கிரீனன்

சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் அஜித்.

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அதனைத் தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்றது. தற்போது சென்னை திரும்பி இருக்கும் படக்குழுவினர் நாளை முதல் கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்துவிடவே, அவரது இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் அஜித். அப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தான் தற்போதைய அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

ஒரு முன்னணி நிறுவனத்திடம் கேட்ட போது, "பட்ஜெட் அதிகம். அதுமட்டுமன்றி, படத்தை விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தில் கலந்து கொள்ள மாட்டார் அஜித். அப்படியிருக்கும் போது இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் தயாரிப்பது என்பது கஷ்டம்" என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.

தற்போது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் உறுதியான உடன் முறைப்படி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT