தமிழ் சினிமா

எம்ஜிஆருக்கு ’மன்னாதி மன்னன்’, சிவாஜிக்கு ’தெய்வப்பிறவி’, கமலுக்கு ‘களத்தூர் கண்ணம்மா’ - 60ம் ஆண்டில் அசத்தல் ஆரம்பம்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


1960ம் ஆண்டில், எம்ஜிஆருக்கு ‘மன்னாதி மன்னன்’ மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. சிவாஜிக்கு ‘தெய்வப்பிறவி’ மிகச்சிறந்த வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல், ஏவிஎம்மின் ‘களத்தூர் கண்ணம்மா’ கமலின் அறிமுகப்படமாக அமைந்து, பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இதோ... ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியாகி, 59 ஆண்டுகள் முடிந்து 60 ஆண்டுகள் தொடங்கிவிட்டன.

1960ம் ஆண்டு, பல விதமான களங்களில் பலரின் படங்களும் வெளியாகின. எஸ்.எஸ்.வாசனின் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி நடித்திருந்தார். சிறந்த படம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. கலைஞரின் கதை, வசனத்தில், ‘குறவஞ்சி’ படமும் அப்படித்தான் பேசப்பட்டது. சிவாஜி பேசிய வசனங்கள் பெரிதும் கவர்ந்தன.

எம்ஜிஆருக்கு ‘பாக்தாத் திருடன்’, ‘ராஜா தேசிங்கு’, ‘மன்னாதி மன்னன்’ என மூன்று படங்கள் வந்தன. இதில் ‘மன்னாதி மன்னன்’ படம் பேசப்பட்டது. ‘பாக்தாத் திருடன்’ பொழுதுபோக்கு அம்சங்களுடன் வந்த படம் எனக் கொண்டாடப்பட்டது.
இதே வருடத்தில்தான், அஞ்சலிதேவி தயாரித்த தங்கவேலு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்த ‘அடுத்த வீட்டுப் பெண்’ திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதேபோல தங்கவேலு முக்கியப் பாத்திரத்தில் நடித்த, ‘நான் கண்ட சொர்க்கம்’ திரைப்படமும் வெற்றி அடைந்தது.

காமெடி நடிகர் தங்கவேலு நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில், சந்திரபாபு நடித்த ‘கவலை இல்லாத மனிதன்’ திரைப்படமும் வந்தது. அஞ்சலிதேவி போல், கவிஞர் கண்ணதாசன் ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தைத் தயாரித்தார். ’கவலை இல்லாத மனிதன்’ என்றொரு படத்தைத் தயாரித்தேன். இந்தப் படத்தால், அத்தனைக் கவலைகளையும் அடைந்தேன்’ என்று, கண்ணதாசனே சொல்லிப் புலம்பும் அளவுக்கு, படம் படுதோல்வியைச் சந்தித்தது.



மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில், ஆர்.எஸ்.மனோகர்தான் கதையின் நாயகன் .படம் செம ஹிட்டு. சி செண்டரில் கூட்டம் அலைமோதியது. ஜெமினி கணேசனுக்கு ‘கைராசி’ வந்தது. ‘மீண்ட சொர்க்கம்’ வெளியானது. ஆனாலும் ஏவிஎம் தயாரிப்பில், ஏ.பீம்சிங் இயக்கத்தில், ‘களத்தூர் கண்ணம்மா’ வந்து, வெற்றியையும் சந்தோஷத்தையும் மொத்த யூனிட்டுக்கும் கொடுத்தது.

ஜெமினியின் நடிப்பு பேசப்பட்டது. சாவித்திரி மிகச்சிறந்த நடிகை என நிரூபணமான படங்களில் இதுவும் ஒன்று. எஸ்.வி.சுப்பையாவும் டி.எஸ்.பாலையாவும் எம்.ஆர்.ராதாவும் தங்களின் வழக்கமான நடிப்பு முத்திரையைப் பதித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார். ‘அந்தநாள்’ படத்தில், போலீஸ் அதிகாரியாகவும் ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் பூதமாகவும் வருவாரே... அவர்தான் ஜாவர் சீதாராமன்.

ஆர்.சுதர்சனம் இசை. எல்லாப் பாடல்களுமே தித்தித்தன. எல்லாவற்றையும் விட முக்கியமாக, செல்வம் எனும் கேரக்டரில் நடித்த சிறுவன் எல்லா இடங்களிலும் பேசப்பட்டான். அந்தச் சிறுவனுக்காகவே ‘களத்தூர் கண்ணம்மா’வை நான்கைந்து முறை தியேட்டருக்கு வந்து பார்த்து மகிழ்ந்தார்கள் ரசிகர்கள். அந்த செல்வம் கேரக்டரில் நடித்த சிறுவன்... நாயகனானார். பின்னாளில் தவிர்க்க முடியாத, உச்ச நாயகனாக வலம் வரத் தொடங்கினார். உலக நாயகன் என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்தச் சிறுவன் கமல்ஹாசன் என்பது இன்றைய சிறுவர்களுக்குக் கூட தெரிந்ததுதானே.

60 வருட சினிமா அனுபவங்களுடன் செறிவுமிக்க படைப்புகளைத் தந்த, தந்துகொண்டிருக்கிற கமல்ஹாசனைப் போற்றுவோம். வாழ்த்துவோம்.

நாளை 12ம் தேதி ‘களத்தூர் கண்ணம்மா’ ரிலீசாகி, 60 ஆண்டுகளாகின்றன.

SCROLL FOR NEXT