தமிழ் சினிமா

ஒரே நாளில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ்

செய்திப்பிரிவு

செப்டம்பர் 6-ம் தேதி அன்று ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

'100% லவ்' என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான '100% காதல்' மற்றும் சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் நடித்திருக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' ஆகிய படங்களே ஒரே நாளில் வெளியாகவுள்ளன.

'100% காதல்' படத்தின் வேலைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டாலும் பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போய் இப்போதுதான் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. அதே நேரத்தில் 'பிச்சைக்காரன்' வெற்றிக்குப் பின் இயக்குநர் சசி எடுத்துள்ள 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதில் பைக் ரேஸர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

ஒரே நாளில் ஒரே நாயகனின் இரண்டு படங்கள் வெளியாகும் போது அது ஒன்றை ஒன்று பாதிக்கும் என்பதால் எப்படியும் இந்த மோதல் தவிர்க்கப்படும் என்றே தெரிகிறது.

ஜிவி பிரகாஷ் 'ஐங்கரன்', 'அடங்காதே', 'ஜெயில்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். வசந்த பாலனின் 'ஜெயில்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் '4ஜி', 'காதலைத் தேடி நித்யானந்தா', 'காதலிக்க யாருமில்லை' உள்ளிட்ட படங்களிலும் ஜி.வி. நடித்து வருகிறார்.

இதனிடையே சூர்யா - சுதா இணையின் 'சூரரைப் போற்று' திரைப்படத்திலும், தனுஷ் - வெற்றிமாறன் இணையின் 'அசுரன்' திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT