ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கும் படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அமிதாப் நடிப்பில் இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. கடந்த 8-ம் தேதி வெளியான 'நேர்கொண்ட பார்வை' விமர்சகர்களிடமும், மக்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் படம் உருவாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்பதை போனி கபூர் சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் அஜித் குமாரின் 60-வது படம் என்பதால் 'தல60' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்ட போது, "கதை மட்டுமே முடிவாகியுள்ளது. இன்னும், அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் யாருமே முடிவாகவில்லை. 'நேர்கொண்ட பார்வை' இப்போது தான் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் யாரெல்லாம் நடிக்கவைக்கலாம் என்ற ஆலோசனை நடைபெறவுள்ளது" என்று பதில் கிடைத்தது.
முன்னதாக, 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் அருண் விஜய். அந்தப் படம் அவருக்கு நிறைய பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது நினைவுகூரத்தக்கது.