தமிழ் சினிமா

ஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி கூட்டணி

செய்திப்பிரிவு

'சிங்கம் 3' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளது உறுதியானது.

விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'சாமி ஸ்கொயர்' படத்தை சமீபத்தில் இயக்கினார் ஹரி. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ஹரி.

இந்தப் புதிய கதையை பல்வேறு முன்னணி நடிகர்களிடம் தெரிவித்தார். கதை பிடித்திருந்தாலும் தேதிகள் பிரச்சினையால் அடுத்தக் கட்டத்துக்கு நகராமலேயே இருந்தது. இதனைத் தெரிந்துகொண்ட சூர்யா, உடனடியாக ஹரியை அழைத்தார். தனது 2டி நிறுவனத்துக்கு படம் பண்ணித் தருமாறு அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துள்ளார்.

இந்தக் கதையில் தானே நடிப்பதாக உறுதியும் அளித்துள்ளார். தற்போது நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து இதில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. இதன் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் ஹரி. இந்தக் கதை 'சிங்கம்' வரிசையில் இல்லாமல், வேறொரு கதையைக் கையில் எடுத்துள்ளார் ஹரி.

'ஆறு', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம் 2' மற்றும் 'சிங்கம் 3' ஆகிய படங்களைத் தொடர்ந்து, மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT