'ஜெர்சி' தமிழ் ரீமேக்கை நெல்சன் இயக்க விஷ்ணு விஷால் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. நாயகியாக அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஜெர்சி'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 19-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இதில் தமிழ் ரீமேக் உரிமையை ராணா தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நானி நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார்.
யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. 'ஜெர்சி' படத்தின் கதைக்களத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதும் பணிகளை மேற்கொண்டு வருகிறார் நெல்சன்.
நாயகியாக அமலாபாலை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று திரையுலகினர் தெரிவித்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டுக்குள் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.