தமிழ் சினிமா

'ஆடை' விவகாரம்: லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்விக்கு அமலாபால் பதில்

செய்திப்பிரிவு

'ஆடை' படத்தின் விவகாரம் தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு அமலாபால் பதில் அளித்துள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், வி.ஜே.ரம்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆடை'. விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக இந்தப் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

'ஆடை' படத்தில் அமலாபாலின் துணிச்சலான நடிப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், "அமலா, 'ஆடை'க்கு வாழ்த்துகள். படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் கடின உழைப்பு தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்குத் தயாரா? உங்களுக்கும், இயக்குநருக்கும் என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக, நடிகராக அல்ல, ஒரு ரசிகையாக, பெண்ணாக, பெண்களின் அம்மாவாக'' என்று தெரிவித்தார். அச்சமயத்தில் அமலாபால் பதில் எதுவும் அளிக்கவில்லை.

இந்நிலையில், 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கான விமர்சன சர்ச்சை ஒன்று இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதனைப் பகிர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன், “புரட்சிகரமாக இருந்த ஒரு பெண், 'அடக்கமான' ஒரு பெண்ணால் பாடம் புகட்டப்பட்ட பிறகு தனது வழிகளை மாற்றிக்கொண்டார் என்று புரிந்து கொள்ளலாமா? இல்லையென்றாலும் சரி தான்” என்று அமலாபாலைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமலாபால், “காமினி படம் முழுவதும் ஒரு ஜாலியான, கலாட்டாவான கதாபாத்திரம்தான். சமூகத்துக்குள் தொடர்ந்து நிலவும் ஒரே மாதிரியான விஷயங்களைச் சுற்றித்தான் அவளது புரட்சி எல்லாம்.

நங்கேலியைச் சந்தித்த பிறகு காமினி முதிர்ச்சி அடைகிறாள். தனது குரல், சில அமைதியை உடைக்கப் பயன்படும் என்பதை உணர்கிறாள். இது மிக மிக எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடியது. நங்கேலியின் சந்திப்பு ஒரு மகிழ்ச்சிகரமான சுய உணர்தல் போல. இதைத் தாண்டி எதையும் குறியீடாகப் புரிந்துகொள்ள எதுவுமில்லை. எல்லாம் வெளிப்படையாகவே சொல்லப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார் அமலாபால்.

SCROLL FOR NEXT