வி.ராம்ஜி
சிவாஜி நடித்த ‘நிறைகுடம்’ இன்றுடன் 50 வருடங்களைத் தொடுகிறது. 69ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிலீசானது ‘நிறைகுடம்’. அதே வருடத்தில், சிவாஜி கணேசன், எட்டு படங்களில் நடித்திருக்கிறார், வெளியாகியிருக்கின்றன.
முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் உருவானது ‘நிறைகுடம்’ திரைப்படம். இயக்குநர் மகேந்திரனின் கதை இது. இந்தப் படத்துக்கு நடிகர் சோ, திரைக்கதை, வசனம் எழுதினார்.
சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ, முத்துராமன், சோ, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், விகே.ராமசாமி முதலானோர் நடித்த இந்தப் படம், வெற்றிப்படமாக அமைந்தது. முக்தா பிலிம்ஸில் சிவாஜி நடித்த முதல் படம் இது. சிவாஜியும் வாணிஸ்ரீயும் ‘உயர்ந்த மனிதன்’ படத்துக்குப் பிறகு சேர்ந்து நடித்த இரண்டாவது படம்.
69ம் வருடத்தின் தொடக்கத்திலிருந்தே சிவாஜி நடித்த படங்கள் வரிசையாக வந்தவண்ணம் இருந்தன. சிவாஜி, சரோஜாதேவி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் முதலானோர் நடித்து, டி.என்.பாலு இயக்கிய ‘அஞ்சல்பெட்டி 520’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியானது. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் இது.
சிவாஜி, சரோஜாதேவி நடிக்க, ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ‘அன்பளிப்பு’ திரைப்படம் அடுத்து வெளியானது. சுமாரான படம் என்று விமர்சிக்கப்பட்டது. சுமாராகத்தான் ஓடியது.
இயக்குநர் கே.விஜயன் இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘காவல்தெய்வம்’ வெளியானதும் இந்த ஆண்டுதான். ஜெயகாந்தனின் கதையை நடிகர் எஸ்.வி.சுப்பையா தயாரிக்க, அவர்களுக்காக சிவாஜி நடித்துக் கொடுத்தார்.
சிவாஜியும் பத்மினியும் நடித்து, ஏபி.நாகராஜன் இயக்கத்தில் ‘குருதட்சணை’ திரைப்படம் அதே வருடத்தில், ஜூன் மாதத்தில் வெளியானது. முன்னதாக, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், நடிகை பாரதி நாயகியாகவும் சிவாஜி ஹீரோவாகவும் நடித்த ‘தங்கச்சுரங்கம்’ மார்ச் மாதத்தில் வெளியானது.
ஆகஸ்ட் 8ம் தேதி ‘நிறைகுடம்’ ரிலீசானது. இந்தப் படம் வெளியான கொஞ்சநாளிலேயே செப்டம்பர் 5ம் தேதி, ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த ‘தெய்வமகன்’ திரைப்படம் வெளியானது. ஏற்கெனவே, சிவாஜி முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் விஷயம் பரவலாக செய்தியாகியிருந்ததால், இந்தப் படம் குறித்தே எங்கும் பேசப்பட்டது. படம் வெளியாகி, மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.
இதன் பிறகு, சிவாஜியின் நண்பரும் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜியின் தயாரிப்பில், கே.ஆர்.விஜயாவுடன் சிவாஜி நடித்த ‘திருடன்’ திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியானது. இந்தப்படத்தை ஏ.சி.திருலோகசந்தரே இயக்கியிருந்தார்.
இதன் பிறகு நவம்பர் 9ம் தேதி இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில், சிவாஜி, காஞ்சனா நடித்த ‘சிவந்த மண்’ வெளியானது.
69ம் வருடத்தில், சிவாஜி எட்டு படங்களில் நடித்தார். அதில், ‘அன்பளிப்பு’, ‘திருடன்’, ‘தெய்வமகன்’ என மூன்று படங்களை ஏசி.திருலோகசந்தர் இயக்கினார்.
‘