ரசிகர்களுடன் படம் பார்த்ததை மறக்க முடியாது என்று 'நேர்கொண்ட பார்வை' பார்த்துவிட்டு கண் கலங்கியபடியே ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 8) வெளியாகியுள்ளது.
'விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு வெளியாகியுள்ள அஜித் படம் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் பலருமே இந்தப் படத்தைத் தேர்வு செய்து நடித்ததிற்காக அஜித்தைப் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) காலை 4 மணிக்கு காட்சியில் ரசிகர்களுடன் 'நேர்கொண்ட பார்வை' படக்குழுவினரும் இணைந்து படத்தை கண்டுகழித்தார்கள். இசையமைப்பாளர் யுவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் காட்சி முடிந்தவுடன் வெளியே வந்த போது மிகவும் கண்கலங்கினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பத்திரிகையாளர் மத்தியில் பேசும் போது, "ரசிகர்களுடன் படம் பார்த்ததை மறக்க முடியாது. ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மிகவும் வலுவானவர்கள்.
படத்தின் மிக முக்கியமான வசனங்களைக் கவனிக்கிறார்கள். மாஸ் காட்சிகளுக்கு சந்தோஷப்படுகிறார்கள். முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது ஒரு அனுபவம். ஆனால், அதே படத்தில் நாமும் இடம்பெற்றிருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் " என்று தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இதனைத் தொடர்ந்து 'நேர்கொண்ட பார்வை' ரசிகர்களுடன் பார்த்த அனுபவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் ட்வீட்களை வெளியிட்டுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதில் "இன்று ரோகிணியில் 'நேர்கொண்ட பார்வை' 4 மணி காட்சி பார்த்தேன். மிகவும் உற்சாகமான சூழல். தங்கள் ‘தல’ மேல் உள்ள அன்பாலும் ஆர்வத்தாலும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.
இன்று காலை கிடைத்த வரவேற்புபோல நான் இதுவரை கண்டதில்லை. அதன் பிறகு படம் ஆரம்பித்தது. படக்குழுவில் ஒருவராக இருந்துகொண்டு இதை சொல்வது நன்றாக இருக்காது, எனினும் நம்முடைய படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அனைவருடைய நடிப்பும் அற்புதமாக இருந்தது. படத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பரிதாபம், வெறுப்பு, கோபம், பயம் என்று அவர்களுக்காக உங்களை உணர்ச்சிவசப்பட வைப்பார்கள். இன்று நான் என்னுடைய இயக்குநர் வினோத் சார்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் மீது நிபந்தனையற்ற நம்பிக்கை வைத்தேன் சார், மிகவும் மகிழ்வாக இருக்கிறேன். இந்த படம் என்னை மாற்றி விட்டது. இந்த படம் நம் அனைவரின் வாழ்வையும் மாற்றும் என்று அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் கூறியது 100% சரியானது.
இந்த முழு படத்தையும் எடுக்க முன்வந்து அதை நடத்தியும் காட்டிய என்னுடைய தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு கவுரவம். வெளிப்புற படப்பிடிப்பு கடினமானவையாக இருக்கும்.
இது போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு படத்தை எடுப்பது சவாலான ஒரு விஷயம். பரபரப்பு மிகுந்த இந்தப் படம் முழுவதும் எப்போதும் சிரித்த முகத்துடனும், சக்தியுடனும் இருந்த என்னுடைய படக்குழுவில் இருந்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். உங்கள் சிரிப்புகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி.
இது ஒரு நபருடைய படமல்ல. இது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நடிகர்களுக்கும் சொந்தமான படம். அனைவருக்கும் இதில் உரிமை உள்ளது. இந்த படத்தில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான நாள். என்னுடைய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.
இன்று காலை படத்தின் இறுதியில் பெயர்கள் திரையுல் ஓடிக் கொண்டிருந்தது. நான் ஒருவழியாக மீராவை விட்டு வெளியில் வந்தேன். அனைத்து சிக்கல்களையும் அவள் எதிர்த்து நின்றதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
அவளுடைய வெற்றியை என் இதயத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். இறுதியில் அனைத்தும் தகுதி வாய்ந்ததாக ஆனது. ‘தல’ ரசிகர் படைக்கும் என்னுடைய நடிப்பை கவனிக்கும் 0.00001% பார்வையாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நன்றி. உங்களுடைய ஆராவாரம் இன்னும் என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.