'நேர்கொண்ட பார்வை' டிக்கெட்டுக்காக ரசிகரின் செயல் ஒன்றுக்கு நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 8) வெளியாகியுள்ளது.
'விஸ்வாசம்' படத்துக்குப் பிறகு வெளியாகியுள்ள அஜித் படம் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் பலருமே இந்தப் படத்தைத் தேர்வு செய்து நடித்ததிற்காக அஜித்தைப் பாராட்டி வருகிறார்கள்.
'நேர்கொண்ட பார்வை' படத்தின் டிக்கெட்டுக்காக ரசிகரின் செயலுக்காக சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து, “எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இப்போது சத்யம் திரையரங்கில் இருக்கிறேன்.. இங்கே எனக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மனிதர் 'நேர்கொண்ட பார்வை' டிக்கெட் பிரச்சனை காரணமாக பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தன்னையே எரித்துக் கொள்ள தீக்குச்சியை தேடிக்கொண்டிருக்கிறார்.
தல அஜித்தோ அல்லது வேறு எந்த நடிகர்களோ இதை ஊக்குவிக்கக் கூடாது. ஒரு படத்தின் டிக்கெட்டுக்காக உங்கள் உயிரையே விடுவீர்களா?. போலீஸ் அவரை இப்போது கைது செய்துள்ளது. இந்த பிரச்சனையை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது எச்சரிக்கைக்காக மட்டுமே.. எதிர்மறை கருத்துக்களைப் பரப்பவேண்டாம். ஒருவரின் வாழ்க்கை இதில் அடங்கி இருக்கிறது, தயவு செய்து இதை கிண்டல் செய்யாதீர்கள். ஒரு படம் ரசித்துப் பார்ப்பதற்கு மட்டுமே அன்றி இது போன்ற காரியங்களை செய்வதற்கு அல்ல. தியேட்டருக்கு சென்று ரசிக்கவும்" என்று தெரிவித்துள்ளார் சாந்தனு.