தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓ பேபி' படத்தின் தமிழ் டப்பிங் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ பேபி’. ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் தழுவல் இது. தெலுங்கில் சுமார் ரூ.45 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
தெலுங்கில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டபோதே, தமிழிலும் ட்ரெய்லர் வெளியானது. ஆனால், தெலுங்கில் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றாலும் தமிழில் எப்போது வெளியீடு என்பது தெரியாமலேயே இருந்தது.
இந்நிலையில், தமிழில் 'ஓ பேபி' ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு தமிழில் சமந்தா நடிப்பில் வெளியாகும் படம் இது என்பது நினைவுகூரத்தக்கது.
தற்போது புதிதாக எந்தவொரு தமிழ்ப் படத்திலும் சமந்தா ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் 'மன்மதுடு 2' மற்றும் '96' ரீமேக் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.