தமிழ் சினிமா

'கோமாளி' படக்குழுவினரை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்

செய்திப்பிரிவு

'கோமாளி' ட்ரெய்லரில் ரஜினியைக் கிண்டல் செய்திருப்பதை, தனது ட்விட்டர் பதிவில் மறைமுகமாகச் சாடியுள்ளார் லாரன்ஸ்.

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர்  ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர். 

இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 'கோமாளி' ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கமல், அதன் தயாரிப்பாளருக்குத் தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்தார். இதனால் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் ப்ரதீப் தெரிவித்தனர். ஜெயம் ரவியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ஆதரவாளரான நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு. இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு. நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது. விடு தலைவா.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்" என்று தெரிவித்துள்ளார்.

'கோமாளி' ட்ரெய்லரில் ரஜினியைக் கிண்டல் செய்ததற்கு, மறைமுகமாகச் சாடியே இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது. தற்போது 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். அதை முடித்துவிட்டு, தமிழில் சூப்பர் ஹீரோ கதையொன்றை இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT