முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பிகில்' படத்தில் விஜய் பாடியுள்ள 'வெறித்தனம்' பாடல் பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் 'வெறித்தனம்' என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் பாடியுள்ள 'வெறித்தனம்' பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், “விஜய் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு அவரது குரல் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்துள்ளது. ’பிகில்’ இசையைப் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. இன்னமும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அது சஸ்பென்ஸ்" என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள 'சிங்கப்பெண்ணே' பற்றி பேசுகையில், "எனது அம்மா, எனது மனைவி, மகள்கள், சகோதரிகள் என அனைவரும் சிங்கப்பெண்கள்தான். இவர்கள் அனைவரும் உணர்ச்சிரீதியாக, ஆன்மிகரீதியாக என்னை ஆதரிப்பவர்கள். அவர்களுடன் இருப்பதும் அவர்களால் உந்தப்படுவதும் அற்புதமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் 'சிங்கப்பெண்ணே' பாடலை மேடையில் முதல் முறையாகப் பாடவுள்ளார் ரஹ்மான்.
அஜித்- போனி கபூர் இணையும் அடுத்த படத்துக்கான இசையமைக்கும் வாய்ப்பை ஏற்பீர்களா என்று கேட்டபோது, "இல்லை, என்னால் முடியாது. கைவசம் நிறைய படங்கள் உள்ளன" என்று ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.