ஜோதிகா, ரேவதி இருவரும் திருட்டை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். ரயில் பயணிகளை ஏமாற்றுவது, சிறுவர்களை வைத்து மற்றவர்களிடம் பணம் பறிப்பது என சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில், அந்த ஏரியா தாதா ஆனந்தராஜின் காரை திருடுகின்றனர். எல்லா இடங்களிலும் சாதுர்யமாக தப்பிவிடும் இருவரும், தியேட்டரில் ஒரு காவல் துறை அதிகாரியிடம் தகராறு செய்வதால் கைதாகி சிறைக்கு செல்கின்றனர். அங்கு கைதி சச்சுவின் அறிமுகம் கிடைக்கிறது. புராணங்களில் வருவது போல, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் ஒன்று, தாதா ஆனந்தராஜ் வீட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருக்கும் தகவலை அவர் மூலமாக தெரிந்துகொள்கின்றனர். இவர்களோடு யோகிபாபுவும் சேர்ந்துகொள்கிறார். ஆனந்தராஜை இன்னொரு முறையும் ஏமாற்றி அட்சய பாத்திரத்தை கொள்ளையடித்தார்களா? ஆனந்தராஜிடம் சிக்கி னார்களா? இதுவே ‘ஜாக்பாட்’.
‘குலேபகாவலி’ படத்தை தொடர்ந்து அதே பாணி யில் திருட்டு, புதையல், காமெடி என நாயகிகளை மையமாக வைத்து கல்யாண் இயக்கியுள்ள படம். சில காட்சிகள் அந்த படத்தையும் நினைவுபடுத்து கின்றன.
‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’ என்று சமூக சிந்தனை யோடு, அழுத்தமான கதைக் களங்களுக்கு நடுவே, கலகலப்பான ஒரு படம் தனக்கு தேவை என்பதை உணர்ந்து ஜோதிகா தேர்வு செய்து நடித்துள்ளார். தனது அட்சயா கதாபாத்திரத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார். படத்துக்கு கதாநாயகன் இல்லாத குறையை சண்டைக் காட்சிகளில் முஷ்டி முறுக்கி தீர்த்து வைக்கிறார். மாஷா கதாபாத்திரத்தில் ரேவதியும் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஒருதலையாக ரேவதிக்கு காதல் வலை விரிக்கும் மொட்டை ராஜேந்திரன், குறிசொல்லும் குடு குடுப்பைக்காரரின் சாபத்தால் உருவம் மாறும் யோகி பாபு ஆகியோரும் கலகலப்பு. சைக்கிளில் முட் டையை வைத்து பணம் சம்பாதிப்பது, சாமியார் கெட்டப் பில் காரை திருடுவது போன்ற நகைச்சுவை கள் ரசிக்க வைக்கின்றன. ஆனந்தராஜும் சில காட்சி களில் சிரிக்க வைக்கிறார். ‘மானஸ்தி’ என்ற பெயரில் அவர் பெண் வேடமிட்டு வருவது சற்றே உறுத்தல்.
மன்சூர் அலிகான் போன்ற சிலரது பாத்திர வடிவமைப்பு சரிவர ஒன்றவில்லை. தேவதர்ஷினி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் இருக்கின்றனர். மனோபாலா, நண்டு ஜெகன் உள்ளிட்ட காமெடி கதாபாத்திரங்கள் எந்தவித முடிவும் இல்லாமல் அப்படியே நிற்கின்றன. ஜோதிகா, ரேவதி இருவரும் பின்னி மில்லில் மாட்டிகொண்டு தப்பிக்கும் இடங்கள் சினிமாத்தனமான கோர்வை.
கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பு, பின்னணி இடங்கள் ஆகியவற்றை ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு திறம்பட படமாக்கியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் எங்கோ கேட்ட ரகம். பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பொய் சொல்வது, திருடுவது, பணம் ஈட்டுவது என்று வித்தியாசமான கலகலப்போடு நகர்கிறது முதல் பாதி. அட்சய பாத்திர புதையல் இருக்கும் இடம் தெரியவந்த பிறகு, அதைவிட்டு நகராமல் அங்கேயே நின்றுவிடுகிறது திரைக்கதை. நூறு ரூபாய் நோட்டு காய்க்கும் செடி, கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஆற்று வெள்ளம் மற்றும் அதன் செட், ஜோதிகாவின் சண்டைக் காட்சிகள் ஆகிய இடங்கள் படத்தின் பலவீனத்தை மறக்கடித்து தூக்கி நிறுத்துகின்றன.
சூர்யா தயாரிப்பு, இரு தேர்ந்த நடிகைகள், ‘அட்சய பாத்திரம்’ என்ற புதுமையான விஷயம் ஆகிய ஜாக்பாட்களை இயக்குநர் இன்னும் நன்கு பயன்படுத்தி இருக்கலாம். மொக்கை காமெடிக்கும் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் ‘ஜாக்பாட்'டை நம்பி போகலாம்!