சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடிப்பில் உருவாகியுள்ள 'கென்னடி கிளப்' திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது.
கிராமத்து இளைஞர்களின் வாழ்வில் கபடி எப்படிக் கலந்திருக்கிறது என்பதை உண்மையும் நேர்மையுமாக 'வெண்ணிலா கபடி குழு'வில் பதிவு செய்தவர் சுசீந்திரன். தற்போது பெண்கள் கபடியை மையப்படுத்தியும் விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழலைப் பற்றியும் 'கென்னடி கிளப்' படத்தில் பதிவு செய்துள்ளார்.
முருகானந்தம் என்கிற கபடி கோச் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். பாரதிராஜா மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மீனாட்சி கபடி வீராங்கனையாக நடித்துள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் 'கென்னடி கிளப்' திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 'ஏஞ்சலினா', 'சாம்பியன்' படங்களில் சுசீந்திரன் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை கால்பந்தாட்ட வீரர்களை மையமாகக் கொண்டு 'சாம்பியன்' படத்தை சுசீந்திரன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.