குடும்ப உறவுக்கும், காவல் பணிக்கும் இடையிலான போராட்டத்தை எடுத்துச் சொல்லும் விதமாக, கலைஞர் தொலைக்காட்சியில் ‘பூவே செம்பூவே’ என்ற புதிய தொடர் வரும் வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இதில், பத்ரா என்ற நேர்மையான இளம் போலீஸ் அதிகாரியாக மவுனிகா நடிக்கிறார். சமூக அவலங்களை தட்டிக் கேட்டு, அதற்கு தண்டனை வாங்கித் தரத் துடிக்கும் இவருக்கு, குடும்பரீதியாகவும், பணிரீதியாகவும் சவாலாக விளங்குகிறார் அவரது அண்ணி உமாமகேஸ்வரி. இந்த வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷமிதா நடிக்கிறார்.
பணியில் இருக்கும் குடும்ப பெண்கள் சந்திக்கும் சிக்கல்களை மையப்படுத்தி இத்தொடரின் கதை நகர்கிறது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் ஒரு பெண் தனது கடமையை செவ்வனே செய்து, தனது குடும்ப கவுரவத்தையும் எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை, பல திருப்பங்களோடு சொல்கிறது இத்தொடர்.
‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்குகிறார். இயக்குநர் சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘காத்து கருப்பு’, ‘ஜீ பூம் பா’ உட்பட பல தொடர்களை இயக்கியவர். ‘‘சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’, ‘கவுரவம்’ ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரம் போல, ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அதை ‘பூவே செம்பூவே’ தொடர் நிறைவேற்றும்’’ என்று அவர் கூறினார்.