விஜய்யுடன் இயக்குநர் மோகன் ராஜா | கோப்புப் படம் 
தமிழ் சினிமா

விஜய் - மோகன் ராஜா கூட்டணி: ஜெயம் ரவி சூசகம்

செய்திப்பிரிவு

மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதை, தன் பேட்டியில் சூசகமாக உறுதி செய்துள்ளார் ஜெயம் ரவி

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜெயம் ரவி அளித்த பேட்டியில், விஜய் - மோகன் ராஜா இணையவுள்ளதை உறுதி செய்துள்ளார். விஜய் - மோகன் ராஜா கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “அவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நண்பர்கள். விஜய் அண்ணா என் அண்ணனோடும், அதே போல ராஜா விஜய் அண்ணாவோடும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறார்கள். 

அடிக்கடி போனில் பேசுவார்கள். ஏதாவது நல்லதா இருந்தா பண்ணுவோம் என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் இந்தப் படம் 'தனி ஒருவன் 2'வுக்குப் பிறகுதான் ஆரம்பமாகும்” என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

முன்பாக, விஜய் - மோகன் ராஜா இருவரும் இணைந்து 'வேலாயுதம்' படத்தில் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் அடுத்து உருவாகும் படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது. 

அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படம், 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களை முடித்துவிட்டுத் தான் 'தனி ஒருவன் 2' படத்தில் ஜெயம் ரவி கவனம் செலுத்தவுள்ளார்.  அப்படியென்றால் விஜய் - மோகன் ராஜா படம் 2022-ல் தான் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT