தமிழ் சினிமா

கதைகளில் கசப்பான அனுபவம் உண்டு!: பிந்துமாதவி நேர்காணல்

செய்திப்பிரிவு

மகராசன் மோகன்

ஒரு படத்தின் 2-ம் பாகம் உருவாகும்போது, முதல் பாகத்தில் தொடர்புடைய தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோதான் பணிபுரிவார்கள். நாயகியை பெரும்பாலும் மாற்றிவிடுவார்கள். சுமார்  8 ஆண்டுகளுக்கு பிறகு ‘கழுகு’ 2-ம் பாகம் உருவாகியுள்ளது. இயக்குநர் சத்யசிவா, கிருஷ்ணா, நான் என அதே கூட்டணி. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது’’ என்கிறார் நடிகை பிந்துமாதவி. சிறிய இடைவெளிக்கு பிறகு, தமிழில் பிந்துமாதவி நடிப்பில் வெளிவரும் ‘கழுகு-2’ படத்தின் அனுபவம் குறித்து அவரிடம் தொடர்ந்து பேசியதில் இருந்து..

இப்போதெல்லாம் படங்களின் இரண்டாம் பாகம் பெரிதாக தாக்கம் ஏற்படுத்துவது இல்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?

முதல் பாகம், இரண்டாம் பாகம் எதுவாக இருந்தாலும், கதையில் அழுத்தம் இல்லாவிட்டால் அடிபட்டுத்தான் போகும். கழுகு முதல் பாகம் எடுத்த அதே கூட்டணியோடு உருவாகியுள்ள இந்த படத்தை அப்படி ஒரு வரிசைக்குள் அடுக்கிவிட முடியாது. முதல் பாகம் போலவே வனப்பகுதி பின்னணி என்றாலும், கதைக்களம், கதாபாத்திரம் ஏற்று வெளிப்படுத்தும் நடிப்பு, கதையின் திருப்பங்கள் எல்லாம் இதில் வித்தியாசமாக இருக்கும். படம் பார்க்கும்போது, முதல் பாகத்தை கண்டிப்பாக நினைவுபடுத்தாது. படத்தின் பெயர் மற்றும் எங்கள் கதாபாத்திரங்களை ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசக்கூடும். மற்றபடி படம் முழுக்க புது அனுபவமாகவே இருக்கும்.

உங்கள் நடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?

மூணாறு போகும் வழியில் இருந்து பிரியும் ஒரு மலைப் பிரதேசத்தில் முழு படப்பிடிப்பும் நடந்தது. கார் போக முடியாத, ஏன் நடக்கக்கூட முடியாத பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இயற்கையின் ரம்மியமான பின்னணியை அப்படியே கொண்டுவர வேண்டும் என்று படக்குழுவினர் கடுமையாக உழைத்தனர். அதில் என் பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சி.

நீங்கள் அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்வது ஏன்?

இடைவெளி எடுத்துக்கொள்வது எனக்கும் பிடிப்பதில்லைதான். அதற்காக, நம்மை தேடி வரும் எல்லா கதைகளையும் ஏற்று நடித்தால் சரிவராது. சில நேரங்களில் கதை கேட்கும்போது பிடிப்பதுபோல இருக்கும். ஆனால், படமாக்கம் போன்றவை மனதுக்கு பிடிக்காமல் போய்விடும். அதெல்லாம் கடந்து படம் முடியும் தருவாயில், ‘இது நம்ம படம்’ என்று முழு ஈடுபாட்டுடன் அதில் என் பங்களிப்பை அளித்திருக்கிறேன். அதுபோல சில படங்கள் எனக்கு கசப்பான அனுபவங்களை தந்திருக்கின்றன.  அதனால்தான் இப்போதெல்லாம் நிதானமாக தேர்வு செய்து கதைகளை ஒப்புக்கொள்வதில் உறுதியாக இருக்கிறேன்.

பிக் பாஸ் முதல் பாகத்தில் நீங்களும் இருந்தீர்கள். தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3-வது சீசன் பார்க்கிறீர்களா?

அவ்வப்போது பார்க்கிறேன். அந்த வீட்டுக்குள் ஒரு மாதம் இருந்தது நல்ல அனுபவம். மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். ஒரு நல்ல அடையாளத்தையும், நம்பிக்கையையும் எனக்குள் விதைத்த நிகழ்ச்சி அது. அதே சமயம், எல்லோருக்கும் அந்த நிகழ்ச்சி பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பிடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்னைக் கேட்டால், பாசிடிவாக பார்க்கிற வரை நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சி.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி, நீங்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘புகழேந்தி எனும் நான்’ படம் என்ன ஆனது?

அது ஒரு பொலிடிகல் டிராமா வகை படம். நல்ல கதைக்களம். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமான கதைகூட. முதல்கட்ட படப்பிடிப்புக்கும் சென்றோம். அதன்பிறகு எதிர்பாராதவிதமாக படப் பிடிப்பு நின்றுவிட்டது. மீண்டும் தொடங்க உள்ளதாக பின்னர் கேள்விப்பட்டேன். ஆனால், என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. திரும்ப அழைத்தால் நிச்சயம் படப்பிடிப்புக்குச் செல்வேன்.

படம்: எல்.சீனிவாசன்

SCROLL FOR NEXT