மும்பை
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரனை மையப்படுத்தி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த திரைப்படம், தர்மோசர் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால், முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படத்தை 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்த ராணா டகுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராணா டகுபதி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, " நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குறித்த பயோபிக் திரைப்படத்தை என்னுடைய நிறுவனம் தயாரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படத்தை எம்எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். என்னுடைய சுரேஷ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, தார் பிலிம்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை விவரிக்கும் கதையாக இது இருக்கும். விரைவில் திரைக்கு வரும் " எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தத் திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், " தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கும். ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். முரளிதரனே இப்படத்தில் இணைந்து பணியாற்றி என்னை வழிநடத்த உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு முரளிதரனுக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் " என்றார்.
பிடிஐ