விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்துடன் தீபாவளிக்கு தனுஷ் நடித்து வரும் 'பட்டாஸ்' படமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10-ம் தேதி முடிவடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளை முடித்து தீபாவளிக்கு வெளியிட தயாராகி வருகிறது படக்குழு. இந்தப் படம் அறிவிக்கும் போதே, தீபாவளி வெளியீடு என்று அறிவித்தே தொடங்கப்பட்டது. 'பிகில்' உடன் வேறு எந்தவொரு படமும் வெளியாவதாக தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் 'பட்டாஸ்' படமும் தீபாவளிக்கு வெளிக் கொண்டுவரலாம் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வரும் இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'பட்டாஸ்' படத்தின் கதைக்களமும் கொண்டாட்டமானது என்பதால் தீபாவளிக்கு பொருத்தமாக இருக்கும் என்று சத்யஜோதி நிறுவனம் கருதுகிறது. இதனாலேயே, 'பிகில்' உடன் வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். முன்னதாக தங்களுடைய நிறுவனம் தயாரித்த 'விஸ்வாசம்' படத்தை 'பேட்ட' படத்துடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.