தயாரிப்பாளர் தாணு அளித்த 'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நிராகரித்துவிட்டார் தனுஷ்.
நேற்று (ஜூலை 28) தனுஷ் தனது 36-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தாணு, சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் தாணு பேசும் போது, “இந்தியாவிலிருக்கும் அனைத்து இயக்குநர்களும், நடிகர்களும் தனுஷுடன் பழக வேண்டும், அவரை வைத்துப் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எந்தக் காலகட்டத்திலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கக் கூடிய திறமையைக் கொண்டவர் தனுஷ்.
அவர் 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும், சிறப்பாக நடித்துக் கொண்டே இருப்பார். தனுஷுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதோடு, இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராக பவனி வரப்போகிறார்” என்று பேசினார் தயாரிப்பாளர் தாணு.
தாணுவின் இந்தப் பேச்சு பெரும் வைரலாகப் பரவியது. ஏனென்றால், ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கியவர் தாணு என்பது நினைவுகூரத்தக்கது.
இதே விழாவின் மாலை நிகழ்வில் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா தனுஷுடன் கலந்துகொண்டார். அப்போது தனுஷ் பேசிய போது, “தயாரிப்பாளர் தாணு சார் என் மீதான அன்பு மிகுதியால் பட்டம் கொடுத்துள்ளார். அது எனக்குத் தேவையில்லை. தனுஷ் என்ற பெயர் மட்டுமே போதும்” என்று கூறினார் தனுஷ்.