அன்பான மனைவி, பள்ளி செல்லும் இரு மகன்கள் என்று பகுத்தறிவாளர் சமுத்திரக்கனியின் குடும்பம் சிறியது. ஊர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், கிராமத்தில் மதிப்பாக, கம்பீரமாக வலம் வருகிறார். 6-ம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் கிருபாகரனால் (இவன்தான் கொளஞ்சி) அவருக்கு அடிக்கடி தலைகுனிவு ஏற்படுகிறது. அவனது சேட்டைத்தனத்தைக் கண்டிக்க அவ்வப்போது கைநீட்டுகிறார்.
இதில் அப்பா மீது அவனுக்கு வெறுப்பு வளர்கிறது. இதற்கிடையில் சிறு மனஸ்தாபத்தில் மனைவி சங்கவி கோபித்துக் கொண்டு தன் அண்ணன் வீட்டுக்குச் செல்கிறார். அப்பா தன் நன்மைக்குத்தான் தன்னை தண்டிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாத வயதில் இருக்கும் கிருபாகரனும் அம்மாவுடன் மாமா வீட்டுக்கு சென்றுவிடுகிறான். பெற்றோரை நிரந்தரமாக பிரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறான்.
அவற்றைத் தாண்டி தம்பதியர் மீண்டும் சேர்ந்தார்களா? அப்பா - மகன் உறவு என்ன ஆயிற்று? இதுவே மீதிக் கதை. ஹைப்பர்ஆக்டிவ் எனப்படும் மிகைத்துடுக்கு கொண்ட பிள்ளைகளை பெற்றோர் எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்ற சமகாலப் பிரச்சினையை, கிராம வாழ்வின் பின்னணியில் இயல்பாக சித்தரித்துள்ளார் அறிமுக இயக்குநர் தனராம் சரவணன். ‘மூடர்கூடம்’நவீன் இப்படத்தை தயாரித் திருப்பதோடு, இயக்குநர் தனராமுடன் இணைந்து வசனமும் எழுதியுள்ளார்.
தந்தை - மகன் முரண், தாய் - மகன் பாசம், கணவன் - மனைவி அன்பு ஆகியவை உணர்வுபூர்வமாக, ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சமுத்திரக்கனியை அவரது மகன் கையாளும் விதமும், மற்றவர்களிடம் அவரைப் பற்றி பேசும் வசனங்களும் இயல்பான நகைச்சுவை. அவனது நண்பனாக வரும் சிறுவன் ஆங்கிலத்தையும், தமிழையும் கலந்து பேசி, பல இடங்களில் சிரிக்க வைக்கிறான். தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இறுதிக் காட்சி நெகிழ வைக்கிறது. அதுதான் படத்தின் செய்தி என்ற பிரகடனமாக இல்லாமல் இயல்பாக இருப்பது மேலும் அழகு. பிரதான கதாபாத்திரங்கள் நம்பகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் கோயில் தர்மகர்த்தா, கிராமத்துக் காதலர்கள், முறைப்பெண் ஆகிய கதாபாத்திரங்கள், ஒரு முக்கிய பிரச்சினையை பேசவந்த திரைப்படத்தை மலினமான வணிக சினிமாவாக மாற்றுவதற்கான அப்பட்டத் திணிப்புகளாக தெரிகின்றன. நவீன், சென்றாயன் வரும் பாடல் காட்சியும் வலிந்து நுழைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் இழுக்கும் அளவுக்கு படத்தின் மையக் கருவில் வலுவில்லை என்பதற்காகவே காதல் காட்சிகளும், பாடல்களும் சேர்க்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
அதில் புதுமை, சுவாரஸ்யமும் இல்லாததால், அந்த பகுதிகள் பொறுமையை சோதிக்கின்றன. முதலில் காதல் வெற்றி பெற உதவி செய்து, பிறகு தன் சுயநலத்துக்காக காதலர்களை பிரிக்கும் அளவுக்கு குயுக்தியாக யோசிக்கத் தெரிந்த சிறுவன் கிருபாகரனுக்கு தந்தையின் அக்கறை தெரியாமல் போவது விளங்கவில்லை. கதையோட்டம் எதிர்பார்த்த திசையில் பயணிப்பதும், காட்சிகள் ஊகிக்கும்படி இருப்பதும் திரைக்கதையின் பலவீனம்.
பகுத்தறிவாளர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தும் சமுத்திரக்கனி, சராசரி கிராமத்து அப்பாவை நினைவூட்டுகிறார். இறுதிக் காட்சியில் மிகை நடிப்பை கவனமாக தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் கதாநாயகி சங்கவி, இரு சிறுவர்களின் தாய் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்கிறார். ‘கொளஞ்சி’யாக நடித்துள்ள கிருபாகரனிடம் இயக்குநர் அவ்வளவு நேர்த்தியாக வேலை வாங்கியிருக்கிறார்.
அவனது தம்பியாக வரும் நஸாத் உள்ளிட்ட சிறுவர்களும் புன்னகைக்க வைக்கின்றனர். கிருபாகரனின் மாமனாக ராஜாஜியும், அவரது காதலியாக பூங்கொடியும் கதாபாத்திரத்துக்கு தேவையானதைத் தருகிறார்கள். தர்மகர்த்தாவாக வரும் ‘பிச்சைக்காரன்’ மூர்த்தியின் நடிப்பு மெருகேறியிருக்கிறது. நீராதாரம் மிக்க கிராமம், அங்கு ஈரமும், கோபமுமான கதாபாத்திரங்கள் என்ற கதைக் கள பின்னணியை விஜயன் முனுசாமி தனது ஒளிப்பதிவில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். நடராஜன் சங்கரனின் இசையில் பாடல்கள் நினைவில் நிற்கவில்லை.
குழந்தை வளர்ப்பு, பகுத்தறிவு, உறவுச் சிக்கல் போன்ற கருத்துகளை ஒரே கதையில் இயக்குநர் இயல்பாக கையாண்டிருப்பதை வரவேற்கலாம். இன்னும் செறிவான திரைக்கதையுடன், காதல் எபிஸோடை சுவாரஸ்யமாகவும் தந்திருந்தால் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பான் ‘கொளஞ்சி’.
இந்து டாக்கீஸ் கருத்து: