சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் 'வாலு' படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 17ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.
சமீபத்தில் தான் 'வாலு' படத்தின் 'தாறுமாறு' பாடல் படப்பிடிப்பு முடிவுற்றது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம், தற்போது வெளியீடு வரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 'வாலு' படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ளது.
"தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள்.
எனவே எங்களைத் தவிர வேறு நபர் மூலமாக 'வாலு' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. ஜூலை 17ம் தேதி வெளியாக இருந்த 'வாலு' படத்துக்கு இந்த வழக்கு பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது