2012ல் கேசினோ | படம் பிவி ராம்குமார் 
தமிழ் சினிமா

புதுப்பொலிவுடன் கேசினோ திரையரங்கம்: அஜித் படத்துடன் திறப்பு விழா

செய்திப்பிரிவு

சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றான கேசினோ மறுசீரமைக்கப்பட்டு 'நேர்கொண்ட பார்வை' பட வெளியீட்டுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

1941, டிசம்பர் 13 அன்று திறக்கப்பட்டது கேசினோ திரையரங்கம். பிரிட்டிஷ் நகைச்சுவைத் திரைப்படமான Turned Out Nice Againதான் இங்கு முதன்முதலில் வெளியானது. ஜே.ஹெச்.இரானி குடும்பத்தினருக்குச் சொந்தமானது இந்தத் திரையரங்கம். இரானி 30களின் ஆரம்பத்தில் சென்னை வந்து, ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் ஐஸ் தொழிற்சாலை வைத்தவர்.

முதல் பத்து வருடங்களில் ஆங்கிலப் படங்கள் பிரதானமாகத் திரையிடப்பட்டு வந்தன. 50களில் தமிழ்ப் படங்கள் வெளியாக ஆரம்பித்தன. 1971-ல் மீண்டும் ஆங்கிலப் படங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் 2000 ஆரம்பத்தில், ஐடி துறை வளரத் தொடங்கிய காலத்தில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வேலைக்காக வருபவர்கள் எண்ணிக்கை அதிகமான சமயம், பிரபல தெலுங்குப் படங்களை கேசினோ திரையிட ஆரம்பித்தது. அன்றிலிருந்து நகரத்தில் இருக்கும் தெலுங்கு மக்களின் விருப்பமான அரங்காக மாறியது.

2012-ல், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக இந்தத் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது.


சீரமைப்புப் பணிகள் நடந்து வரும் கேசினோ அரங்கம்

எஸ்பிஐ சினிமாஸ் கேசினோ திரையரங்கின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர். அவர்கள் ஒப்பந்த காலம் இந்த வருடம் ஆரம்பத்தில் முடிந்தது. தற்போது வேறொரு தரப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் மறு சீரமைப்புப் பணிகள் ஒரு மாதத்துக்கு முன்பாகவே தொடங்கப்பட்டன.

ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கேசினோ திரையரங்கை மீண்டும் திறக்கலாம் என்று நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் அஜித் படம் வெளியாவதால், திரையரங்கை முழுக்க துரிதமாக மறுசீரமைத்துவிட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி 'நேர்கொண்ட பார்வை' வெளியீட்டுடன் மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரலாம் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தத் திரையரங்குக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பதால், கட்டிடத்தில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று நிர்வாகம் கூறியுள்ளது.

தற்போது அரங்கின் உள்கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கட்டை இருக்கைகள் எல்லாம் குஷன் இருக்கைகளாக மாறியுள்ளன. ப்ரஜெக்டர், ஒலி அமைப்பு என அனைத்து மேம்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர்களுக்குத் திருப்திகரமான ஒரு திரையரங்க அனுபவத்தைத் தர விரும்புவதாக கேசினோ அரங்கின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

- ஸ்ரீவத்சன் - தி இந்து ஆங்கிலம் | தமிழில் கா.கி

SCROLL FOR NEXT