தமிழ் சினிமா

''சுந்தரம் சார் தந்த இன்ப  அதிர்ச்சி, எஸ்.பி.பி. சாரின் ரெண்டுமணி நேரம், ராதிகா ராட்சஷி, ஜனகராஜ் கலகல.. எல்லாத்துக்கும் மேல இளையராஜா சார்’’ - ‘கேளடி கண்மணி’ அனுபவங்கள்... இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் பேட்டி 

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி
 ''விவேக் சித்ரா சுந்தரம் சார் தந்த இன்ப அதிர்ச்சி, எஸ்.பி.பி. சார் தந்த ரெண்டு மணி நேரம், ராதிகா எனும் ராட்சஷி நடிகை, ஜனகராஜ் தந்த ஒத்துழைப்பு, எல்லாத்துக்கும் மேல இளையராஜா சார்  தன் பாடல்களால் படத்தைத் தூக்கி உயரத்தில் வைத்த அன்பு... ‘கேளடி கண்மணி’ படம் வெளியாகி 29 வருடமாகியும், இன்னும் அந்த நினைவுகள் பசுமையாய் எனக்குள் இருக்கின்றன’’ என்று இயக்குநர் வஸந்த் எஸ். சாய் தெரிவித்தார்.
இயக்குநர் வஸந்தின் முதல் படம் ‘கேளடி கண்மணி’. பாலசந்தரிடம் உதவியாளராக இருந்து, விவேக்சித்ரா சுந்தரத்தின் தயாரிப்பில், பாடகர் எஸ்.பி.பியை நாயகனாக்கி முதன்முதலாக வஸந்த் இயக்கிய படம் ‘கேளடி கண்மணி’. 1990ம் ஆண்டு, ஜூலை மாதம் 27ம் தேதி, இந்தப் படம் வெளியானது. கிட்டத்தட்ட, 29 வருடங்களாகின்றன. 
இந்தநிலையில் இயக்குநர் வஸந்த் எஸ்.சாய், இந்து தமிழ் திசை’ ஆன்லைனுக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். 
அவர் தெரிவித்ததாவது: 
‘’என்னுடைய முதல் படமாக ‘ரிதம்’ பண்ணவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஒவ்வொரு படம் பண்ணும் போதும், ‘ரிதம்’ பண்ணவேண்டும் என்று வேலையில் இறங்குவேன். பிறகு அது வேறொரு படத்துக்குப் போய்விடும். ஏனென்றால், அதற்கான திரைக்கதை சரியாக அமையாமலேயே இருந்தது. அப்படி அமையும் போதுதான் ‘ரிதம்’ எடுத்தேன். ஆகவே, என் முதல் படம்... ‘கேளடி கண்மணி’. 
‘புதுப்புது அர்த்தங்கள்’ ஷூட்டிங் போய்க்கொண்டிருந்த நேரம் அது. ‘வஸந்த்... நாளைக்கி காலைல ஆபீஸ் வாங்களேன்,பேசணும்’ என்று விவேக்சித்ரா சுந்தரம் சார் அழைத்தார். கவிதாலயா சம்பந்தமான விஷயம் என்று நினைத்தேன். பாலசந்தர் சாரிடம் சொன்னேன். ‘போயிட்டு வந்துருடா’ என்றார்.
சுந்தரம் சார், எப்போதுமே வளவளவெனப் பேசமாட்டார். ரெண்டு வார்த்தையில் விஷயத்தைச் சொல்லி முடித்துவிடுவார். ‘வஸந்த்... என் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ என்றார். இதைக் கேட்டதும் நான் அதிர்ந்ததைவிட, மொத்த வீடும் ஷாக்காகிப் போனது. ‘எங்கிட்ட கதை இல்ல சார்’ என்றேன். ‘பரவாயில்ல... கதை ரெடி பண்ணிருங்க’ என்றார். 
‘முகமது பின் துக்ளக்’ எடுத்தவர் சுந்தரம் சார். பிறகு, சோவுடன் சேர்ந்து ‘துக்ளக்’ பத்திரிகையை நடத்தினார். பார்த்திபனை இயக்குநராக்கி, ‘புதிய பாதை’ எடுத்தார். பாக்யராஜிடம் இருந்து ஒரு பார்த்திபனைக் கொண்டுவந்தது போல், பாலசந்தரிடம் இருந்து என்னைக் கொண்டு வரும் நினைப்பில் இருந்தார் சுந்தரம் சார். 
ஆக... சான்ஸ் கேட்டு அலைவதற்கு முன்னாலேயே, என்னைத் தேடி வந்தது வாய்ப்பு. ‘நான் உன்னை லவ் பண்றேன்’ என்று ஒரு பெண்ணே நம்மிடம் வந்து சொன்னால் எப்படி இருக்குமோ அப்படியான உணர்வு எனக்குள்! 
பாலசந்தர் சார் பட்டறையில் சார்லி, நாசர் மாதிரியான  எத்தனையோ பேருக்கு அனந்து சார்தான் பிதாமகர். அவரின் மூலக்கதைதான் ‘கேளடி கண்மணி’. இந்த சமயத்தில் அனந்து சாரையும் சுந்தரம் சாரையும் நினைத்துக்கொள்கிறேன். 
அடுத்து... எஸ்.பி.பி. சார். இந்தப் படம் ஒர்க் பண்ணும் நேரத்தில்,  எஸ்.பி.பி. செம பிஸி பாடகர். ஒரேநாளில், 15 பாடல்களெல்லாம் பாடிக்கொண்டிருந்த தருணம். கன்னடம், தெலுங்கு, இந்தி என ரவுண்டு கட்டி பாடி வந்தார். அவரிடம் ‘நடிக்கணும் சார்’ என்றேன். ‘நேரமே இல்ல. ஒருநாளைக்கு ரெண்டுமணி நேரம்தான் ஒதுக்கமுடியும்’ என்று சொன்னார். ‘சரி சார்... அது போதும்’ என்றேன். சொன்னால் நம்புவீர்களா... ‘கேளடி கண்மணி’ படத்தின் மெயின் கேரக்டர் பண்ணிய எஸ்.பி.பி. சார், தினமும் இரண்டுமணி நேரம் கால்ஷீட் கொடுத்தார். அதை வைத்துத்தான் மொத்தப் படத்தையும் எடுத்துமுடித்தேன். அவரின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் மறக்கவே முடியாது. 
படத்தில் நடித்த ராதிகா... ஒரு ராட்சஷி. படத்தில் அவரின் அம்மா ஸ்ரீவித்யாவும் அப்பா பூரணம் விஸ்வநாதனும் தற்கொலை செய்து கொள்வார்கள்.  அப்போது ராதிகா ராட்சஷத்தனமான நடிப்பை வழங்கினார். அப்போது எடுக்கவேண்டிய காட்சியை ‘ஒரு ஒன் அவர் கழிச்சு எடுக்கலாமா?’ என்று கேட்டார். சரியென்றேன். ரூமிற்குள் சென்றுவிட்டார். என்ன செய்தார்... என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது. பிறகு நடித்தார் . எம்.ஆர்.ராதா நடிகவேள் என்றால், அவரின் மகள் ராதிகா நடிகையர்வேள். கிட்டத்தட்ட 350 அடி சீன் அது. கதறடித்துவிட்டார் ராதிகா. அவர் நடித்து முடிக்க, நான் ஷாட் ஓகே சொன்னதும் மொத்த யூனிட்டும் கைத்தட்டியது. என் படத்தில் நான் இப்படிப் பார்த்தது அதுவே முதல் தடவை. ‘ஆசை’ படத்தில், பூர்ணம் விஸ்வநாதனைப் பார்த்து கடைசிக் காட்சியில் பிரகாஷ்ராஜ் பயந்து நடுங்குவாரே... அந்தக் காட்சி முடிந்ததும் மொத்த யூனிட்டாரும் கைத்தட்டினார்கள். ராதிகாவுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
இங்கே, சுந்தரம் சார் பற்றி இன்னொன்றும் சொல்லவேண்டும். எனக்கு இது முதல்படம். ஆனால் ஒருநாள் கூட படப்பிடிப்பு இடத்துக்கு வரவில்லை. ஒரு காட்சியைக் கூட அவர் பார்க்கவில்லை. இத்தனைக்கும் ‘வாரணம் ஆயிரம்’ பாடலே வேணாம் என்று மறுத்துவிட்டார். காரணம்... பட்ஜெட். படத்தின் ரஷ் காப்பியைக் காட்டினோம். படம் பார்த்துவிட்டு, சின்னக்குழந்தையைப் போல் தேம்பித்தேம்பி அழுதார். படம் ரிலீசானது. தியேட்டர்களில் ஆடியன்ஸ் அழுதார்கள். விவேக் சித்ரா என்பவர் இல்லையெனில், இந்தப் படம் இல்லை. படம் வெளியான கையுடன் எனக்கு மாருதி கார் பரிசாக வழங்கினார்.  அதுதான் சுந்தரம் சார். 
படத்தில் ஜனகராஜ் ஒத்துழைப்பு அபரிமிதமானது. அவரின் காமெடி பேசப்பட்டது. ரமணீயன் எனும் எழுத்தாளர் என் திரைக்கதையில் பங்களிப்பு செய்தார். ’ஊட்டி’ படம் பண்ணிய அன்வர், ‘பூ’ சசி, தில்லை சரவணன், வரதராஜன் என உதவி இயக்குநர்கள் டீம்... செம ஷார்ப். எடிட்டர் கணேஷ்குமார் என் நண்பன். ஆர்ட் டைரக்டர் மகியை இந்தப் படத்தில்தான் அறிமுகப்படுத்தினேன். ரகுநாத ரெட்டி சார் கேமிரா அற்புதம் பண்ணியிருந்தார். 
எல்லாவற்றுக்கும் மேலாக, இளையராஜா சார். ‘கேளடி கண்மணி’ என்கிற முதல் படம் இவ்வளவு பிரமாண்டமாகவும் வெற்றிப்படமாகவும் வந்திருப்பதற்கு இளையராஜா சார்தான் காரணம். ‘சிந்துபைரவி’ யில் இருந்தே என் மீது தனிப்பிரியம் உண்டு அவருக்கு. காலையில் 7 மணிக்கு ரிக்கார்டிங் வந்தார். கதையை விவரித்தேன். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். ஒவ்வொரு பாடலையும் சேர்த்தால், முப்பது நிமிடங்கள் ஒலிபரப்பாகும். அந்த 30 நிமிடத்தில், மொத்தப் பாடலையும் கம்போஸ் செய்துவிட்டார். அவரின் அறையில் உள்ள ரமணர் படமும் அந்தப் படத்தில் வைக்கப்பட்டிருந்த மல்லிகை மலர்களும் அதில் இருந்து புறப்பட்டு நாசி தொட்ட நறுமணமும்... இன்னமும் ஞாபகம் இருக்கின்றன. 
‘மண்ணில் இந்தக் காதல்’ கற்பூர பொம்மை,’ ‘தென்றால்தான் திங்கள்தான்’ என்று எல்லாப்பாடல்களும் இன்றைக்கும் காலர் டியூன், ரிங் டோன்களாக இருக்கின்றன. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிக்காக, இரண்டு நாள் எடுத்துக்கொண்டு பிஜிஎம் பண்ணினார். ராஜா சாரின் அன்பை எப்படி மறக்கமுடியும்?
படத்தைப் பார்த்த கே.பி.சார், ‘அபூர்வ ராகங்கள்ல எனக்குக் கிடைச்சதுல 75 சதவிகிதம் உனக்குக் கிடைக்கும். அப்படி பிரமாதமா வந்திருக்குடா இந்தப் படம்’ என்று சொன்னதுடன், ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். 
பிறகு, ‘கேளடி கண்மணி’ வெள்ளிவிழாவை, ஐந்து இயக்குநர்களைக் கொண்டு கொண்டாடினோம். பாலசந்தர் சார், பாரதிராஜா சார், பாலுமகேந்திரா, மணிரத்னம், விசு என கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் பேசிய பாரதிராஜா சார், ‘குழந்தையைக் காணோம்னு எஸ்.பி.பியும் ராதிகாவும் ஒரு குடைக்குள் இருந்தபடி அனாதை ஆஸ்ரமத்துக்குள்ளே போவாங்க. அங்கேருந்து வெளியே... அதே மழைல, அதே குடைல... அப்பாவும் மகளும் வருவாங்க. ரெண்டுமணி நேரக் கதையை வஸந்த், ரெண்டே ஷாட்ல சொல்லிட்டான்’ என்று பாராட்டினார் பாரதிராஜா.    
‘கேளடி கண்மணி’ குழுவினர் அனைவருக்கும் இந்த சமயத்தில், நன்றியை சொல்லிக்கொள்கிறேன். அப்படியே தமிழ் ரசிகர்களுக்கும்.
இவ்வாறு இயக்குநர் வஸந்த் எஸ் சாய் தெரிவித்தார். 
.   
 

SCROLL FOR NEXT