தமிழ் சினிமா

தைரியமிருந்தால் லாப விகிதத்தில் தொழிலுக்கு வரலாமே: தயாரிப்பாளர்களுக்கு அருள்பதி சவால்

செய்திப்பிரிவு

தைரியமிருந்தால் லாப விகிதத்தில் தொழிலுக்கு வரலாமே என்று தயாரிப்பாளர்களுக்கு விநியோகஸ்தர் அருள்பதி சவால் விடுத்துள்ளார்.

2019-21 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் வித்யாசாகர் 100 வாக்குகள் பெற்றார். செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்குப் பேரரசுவும் போட்டியின்றி தேர்வாகினர்.

இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் விழா சென்னையில் இன்று (ஜூலை 25) காலையில் நடைபெற்றது. இதில் முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட விநியோகஸ்தர் அருள்பதி பேசியதாவது:

“முன்பு தயாரிப்பாளர்கள் எடுத்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு காட்டுவது வழக்கம். இப்போது தயாரிப்பாளர்கள் பெரிய முதலீடு போட்டு படம் எடுக்கிறார். இறுதியில் படம் வெளியானவுடன் விநியோகஸ்தர் பணமே தரவில்லை. அவனே திருடிவிட்டான் என்கிறார். தயாரிப்பாளர்களுக்கு தைரியமிருந்தால் லாப விகிதத்தில் தொழிலுக்கு வரலாமே. 

விநியோகஸ்தர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என நடத்திக்கொண்டு இருக்கிறோம். அதில் உறுப்பினர்களுக்கு என்ன வேலை என்று கேட்டால், ஒன்றுமே கிடையாது. இங்கு அவரவர் செளகிரியத்துக்கு பஞ்சாயத்துகள் நடக்கிறது. தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. சாதிப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒன்றுமே நடக்கப் போவதில்லை. 

திரையுலகமே ஸ்தம்பிக்க வேண்டும், நாளைமுதல் தயாரிப்பாளர்கள் புதிய படங்களுக்கு பூஜையே போடக்கூடாது. தயாரிப்பில் இருக்கும் படங்கள் மட்டும் முடித்து வெளிவரட்டும். அதற்குள் திரையுலகில் இருக்கும் இன்னல்களை பேசித் தீர்த்துவிட்டு படம் எடுப்போம் என்ற சூழ்நிலை வர வேண்டும்” என்று பேசினார் அருள்பதி

SCROLL FOR NEXT