'தர்பார்' போஸ்டர் வடிவமைப்பு தொடர்பாக, ரசிகர்களுக்குப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது படக்குழு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ப்ரதீக் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு 'தர்பார்' படப்பிடிப்பு தளத்திலிருந்து, ரஜினியின் போலீஸ் கெட்டப்புடன் கூடிய புகைப்படம் ஒன்று வெளியானது. இதை ரஜினி ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 25) காலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பதிவில் "’தர்பார்’ அப்டேட் மாலை 6 மணிக்கு" என்று அறிவித்தார். பலரும் படத்தின் டீஸர் தொடர்பான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், ரசிகர்களுக்கு போட்டியொன்றை அறிவித்துள்ளது படக்குழு.
மாலை 6 மணியளவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பதிவில் "7 மணியளவில் 'தர்பார்' படத்திலிருந்து ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் டைட்டில் உள்ளிட்டவற்றை வெளியிடுகிறேன். அதை வைத்து தங்களுடைய எண்ணித்திற்கு ஏற்ப 'தர்பார்' போஸ்டரை வடிவமைத்து வெளியிடுங்கள். அதில் சிறந்ததைத் தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாகவே வெளியிடுவோம்" என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து 7 மணியளவில் 2 புகைப்படங்கள் மற்றும் படத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் லோகோ வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் பலரும் உற்சகமாகியுள்ளனர். மேலும், முதல் முறையாக 'தர்பார்' புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பதால் பலரும் ஷேர் செய்து, ரஜினியின் லுக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வடிவமைப்பில் திறமையும் ஆர்வமும் உள்ளவர்கள் கலந்துக்கொண்டு பரிசை வெல்லலாம்.