அமலாபால் | கோப்புப் படம் 
தமிழ் சினிமா

விமர்சித்தவர்கள்கூட 'ஆடை' படத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்: அமலா பால் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

தவறாகப் பேசியவர்கள் கூட 'ஆடை' படத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் என்று நடிகை அமலாபால் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ரத்ன குமார் இயக்கத்தில், அமலாபால், வி.ஜே.ரம்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஆடை'. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

இந்தப் படத்தின்  பிற்பாதியில் துணிச்சலாக உடையின்றி நடித்த அமலாபாலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும், படம் வெளியானவுடன் அவரும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். 

இன்று (ஜூலை 24) சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவொன்றை இயக்குநர் பாரதிராஜா மற்றும் அமலாபால் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் அமலாபால்.

அப்போது அவர் கூறியது: “'ஆடை' படம் தொடர்பாக வந்த கருத்துகள், விமர்சனங்கள் அனைத்துக்கும் நன்றி.  'மைனா' படத்திலிருந்து தொடர்ச்சியாக என்னை ஆதரித்து வருகிறீர்கள். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு நிறைய விமர்சனங்கள் இருந்தன. இந்தக் கதை என்னிடம் வரும் போதே, இப்படியொரு எதிர் கருத்து வருமே என்று நினைத்தேன். ஆனால், அதையே சவாலாக எடுத்துக் கொண்டு நடித்தேன்.

ஒரு விஷயத்தை முடியாது என்று சொல்லும் போது, அதைச் செய்து காட்டுவது தான் வெற்றி. 'ஆடை' படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை, படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் படம் வெளியானவுடன் ஒரே இரவில் அனைத்தும் மாறிவிட்டது. என்னைப் பற்றி விமர்சித்துப் பேசியவர்கள்கூட, 'ஆடை' பார்த்துவிட்டு சந்தோஷப்படுகிறார்கள். ஏ சான்றிதழ் கொடுக்க வேண்டிய படமல்ல, யு சான்றிதழ் கொடுக்க வேண்டிய படம் என்று சொல்கிறார்கள். அதை மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்.

லட்சுமி ராமகிருஷ்ணன் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஆரோக்கியமான விவாதம் எப்போதுமே சிறந்தது தான். அந்த வகையில் நேரம் கிடைக்கும் போது லட்சுமி ராமகிருஷ்ணனுடன் விவாதத்தில் கலந்து கொள்வேன். பார்த்திபன் ட்வீட்டை நான் பார்க்கவில்லை. அதைப் பார்த்துவிட்டு கருத்து சொல்கிறேன். நாயகியை மையப்படுத்திய கதைகள் தாண்டி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம். அது தான் என்னுடைய கனவு. 

'ஆடை' படம் வெளிவருவதற்கு முன்பு அதில் ஆடையில்லாமல் நடித்ததைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம். படத்தைப் பார்த்தவுடன், அனைவரும் பாருங்கள் என்கிறார்கள். ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கு முன்பே, அதைப் பற்றிய முன்முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த சமூகமே எதிர்மறையை நோக்கித்தான் சிந்திக்கிறது. சினிமா மற்றும் சமூகம் மாற வேண்டும். பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் மேம்பட வேண்டும்”.

இவ்வாறு அமலாபால் பேசினார்.

SCROLL FOR NEXT