சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களின் கடும் கிண்டலுக்கு ஆளானது 'பிகில்' படக்குழு.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். 'பிகில்' படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் சில நாட்களுக்கு இணையத்தில் லீக்கானது.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தது படக்குழு. அந்தப் பாடல் வைரலாக அனைத்து வகையான சமூக வலைதளத்திலும் பரவியது. இதில் எங்கிருந்து வெளியானது உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து வருகிறது படக்குழு. இந்தப் பிரச்சினையால் 'சிங்கப்பெண்ணே' பாடலை மட்டும் வெளியிட படக்குழு முடிவு செய்தது.
இதற்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. போஸ்டரில் நேரத்தைக் குறிப்பிடவில்லை. காலையில் வெளியாகும், மதியம் வெளியாகும், மாலையில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடந்தனர்.
ஆனால், மாலை 7 மணி வரை எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது குறித்து படக்குழுவினர் எதையுமே தெரிவிக்கவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் பலரும் 'எத்தனை மணிக்காவது சொல்லுங்கய்யா' என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லீ உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டு கேள்வி கேட்கத் தொடங்கினர்.
நேற்றிரவு (ஜூலை 23) 9:35 மணியளவில் தான் இயக்குநர் அட்லீ, யூ டியூப் லிங்க் ஒன்றை வெளியிட்டார். இந்த லிங்க்கில் இரவு 10 மணிக்கு 'சிங்கப்பெண்ணே' பாடல் வெளியாகும் என்று தெரிவித்தார். இவ்வளவு தாமதமாக வெளியாவதால், படத்தின் மேக்கிங் ஏதாவது இடம்பெறும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினரைப் பாட வைத்து ஷூட் செய்து, அதிலேயே பாடலின் வரிகளும் இடம்பெற வைத்திருந்தனர்.
'சிங்கப்பெண்ணே' பாடல் முன்பே இணையத்தில் லீக்காகிவிட்டாலும், நேற்று (ஜூலை 24) விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.