எல்லாவற்றுக்கும் பந்தயம் கட்டி வெற்றியை ருசிப்பவர் அமலாபால். இவர் தனியார் டிவியில் ‘தொப்பி தொப்பி’ என்ற குறும்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். நீதிமன்ற உத்தரவு காரணமாக, டிவி அலுவலகத்தை காலி செய்ய நேரிடுகிறது. எல்லோரும் வெளியேறிவிட, அமலாபால், தோழி ரம்யா, 4 ஆண் நண்பர்கள் மட்டும் அந்த கட்டிடத்திலேயே குடித்து கும்மாளமாக இரவு முழுவதும் கழிக்க முடிவெடுக்கின்றனர். போதையில் முதலில் ஆட்டம் பாட்டமாக தொடங்குவது, ஒரு கட்டத்தில் சண்டை சச்சரவாக மாறு கிறது. இந்த நிலையில், நிர்வாண மாக செய்தி வாசிப்பதாக அமலா பால் கட்டிய பந்தயத்தை நினை வூட்டுகிறார் ரம்யா. போதை ஏறிய அமலாபால், ‘செய்தி வாசிப்பது என்ன.. இரவு முழுவதும் இந்த கட்டிடத்தில் நிர்வாணமாக இருக் கிறேன்’ என்று சொல்லி, அவ்வாறே செய்கிறார். மறுநாள் பொழுது விடியும்போது, தான் மட்டும் அங்கு தன்னந்தனியாக நிர்வாணமாகப் படுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அந்த கட்டிடத்தில் இருந்து அவர் தப்பினாரா? உடன் இருந்த நண் பர்கள் என்ன ஆனார்கள்? இந்த கேள்விகளின் விடையாக இருக் கிறது ‘ஆடை’.
ஆடையின் அவசியம் பற்றி கூறுவதற்காக, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடந்த தோள்சீலைப் போராட்டம் தொட்டுக் காட்டப்படு கிறது. வரலாற்று நாயகி நங்கேலி யின் கதையோடு படம் தொடங்கு வது, இது பெண்ணியக் கதை என் பதற்கான கட்டியத்தை துணிச்ச லாக கூறுகிறது. பிறகு, எப்படியான பெண்ணியம் இன்றைய தேவை என்பதை மலைவாழ் பெண் கதாபாத்திரத்தின் ஊடாகக் காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
டிவி நிகழ்ச்சி சம்பவங்கள் சற்று நீளம் என்றபோதும், இடைவேளை வரை படம் வேகமாக நகர்கிறது. அதன் பிறகு, கட்டிடத்தில் இருந்து தப்பிக்க அமலாபால் மேற்கொள் ளும் முயற்சிகள் காரணமாக சிறிது தொய்வு ஏற்படுகிறது. இறுதியில் எதிர்பார்க்காத வகையில் திரைக் கதை சென்று முடிகிறது.
தமிழ் சினிமாவில் கதாநாயகன் அறிமுகக் காட்சிக்கு இணையாக, கதாநாயகி அமலாபாலுக்கு கொடுக்கப்படும் வர்ணனை ரசிக்கவே வைக்கிறது. அமலாபாலை நம்பித்தான் படம் முழுவதுமே நகர் கிறது. அவரும் இதை உணர்ந்து கொண்டு, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இடை வேளைக்குப் பிறகு பெரும்பாலும் ஆடை இல்லாமலே வருகிறார். ஆனால், எந்த காட்சியும் கவர்ச்சி யாகவோ, ஆபாசமாகவோ இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பார்வையில் இருந்து உடலைக் காட்ட முனைந்தது பாராட்டுக்குரியது.
பெண்ணியம் தொடர்பாக கருத்து சொல்ல ஆசைப்பட்ட இயக்குநர், படம் போரடித்துவிடக் கூடாது; மெசேஜ் சொல்லும் படமாக மாறிவிடக் கூடாது என்பதிலும் ஜாக்கிரதையாகவே இருக் கிறார். ஆங்காங்கே அரசியல் நையாண்டிகள், இரட்டை அர்த்த காமெடி துணுக்குகள் என படத்தை நகர்த்தியிருக்கிறார். இறுதியில் நங்கேலியின் அறிவுரை கொஞ்சம் அதிகம்.
ஊர் தப்பாக பேசிவிடக் கூடாதே என்று பதைபதைக்கும் சராசரி அம்மாவாக ஸ்ரீரஞ்சனி சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். விவேக் பிரசன்னா, ‘வி.ஜே’ ரம்யா, சரித் திரன், ரோஹித் நந்தகுமார் ஆகி யோரும் படத்தைச் சுவாரஸ்யப் படுத்த உதவுகின்றனர்.
விவேக் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, படத்துக்கு பலம். பாடகர் பிரதீப் குமாரின் பின்னணி இசையும், தனது ‘ஊர்கா’ இசை பேண்டு மூலமாக அவர் தந் திருக்கும் பாடல்களும் சில கட்டங்களை விறுவிறுப்பாக்க உதவுகின்றன. ‘நீ வானவில்லா’ பாடல் ரசனை.
எதிர்ப்படும் மக்களை திடீ ரென அதிர்ச்சியில் ஆழ்த்தி, கடைசி யாக, மறைத்து வைத்திருக்கும் கேமராவை காட்டி அவர்களை முட்டாளாக்கும் டிவி நிகழ்ச்சிதான் படத்தின் மையம். இது வெறும் கேளிக்கை அல்ல; சக மனிதர் கள் இடையே உள்ள நம்பகத் தன்மையை சுக்குநூறாக்கும் விபரீத விளையாட்டு என்று ஊடகங்களின் தலையில் குட்டு வைத்திருக்கிறார் இயக்குநர். விளையாட்டு வினையாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையை, பெண்ணின் சுதந்திரம் எதுவரை என்ற கருத்தை பொழுதுபோக்காக எடுத்துரைக்கிறது ‘ஆடை’.