கர்ப்பமாக இருக்கும் மனைவி அக்சரா ஹாசனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார் டாக்டர் அபி ஹசன் (நடிகர் நாசரின் மகன்). அவர் பணிபுரியும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரி வில் சேர்க்கப்படுகிறார் விபத்தில் காயமடைந்த விக்ரம். மருத் துவமனையில் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அதில் இருந்து விக்ரமை காப்பாற்று கிறார் அபி.
இதன்பின்னர் விக்ரம் யார் என்ற பின்னணியைத் துழாவத் தொடங்குகிறது மலேசிய காவல் துறை. அதேநேரம் அக்சரா ஹாசன் கடத்தப்படுகிறார். விக்ரமை தங் களிடம் ஒப்படைத்தால் அக்சராவை விடுவிப்பதாக டாக்டர் அபியிடம் கூறுகிறது ஒரு குரல்.
மனைவியை அபியால் மீட்க முடிந்ததா? விக்ரம் யார்? அவரைக் கொல்ல ஏன் முயற்சிக்கின்றனர்? விக்ரமின் பின்னணியை மலேசிய காவல் துறை கண்டுபிடித்ததா? இதற்கெல்லாம் பதில் சொல்கிறது ‘கடாரம் கொண்டான்’.
கமலின் தயாரிப்பில் உருவாகி யுள்ள இப்படத்தை, அவரது உதவி யாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குநருமான ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். சில காட்சிகள் ‘தூங்காவனத்தை’ நினைவுபடுத்தினாலும், பல காட்சி கள் பரவசத்தைத் தருகின்றன.
கதை முழுவதும் மலேசியாவில் நடக்கிறது. அங்கே குடியேறிய சில நாட்களில், காதல் மணம் புரிந்து கொண்டு சொந்தக் காலில் நிற்கத் துணிந்துவிட்ட அபி - அக்சரா தம்பதியின் அன்யோன்யத்தை ஒரு பாடல் காட்சி, ஒரு மருத்துவ மனைக் காட்சி, ஒரு சமையலறைக் காட்சி வழியாக நறுக்கென்று சித்தரித்தது சிறப்பு.
அதேபோல, நல்லவனுக்கு நல்லவன்.. கெட்டவனுக்கு கெட் டவன் அவதாரம் எடுக்கக்கூடிய சீக்ரெட் ஏஜென்ட்டான விக்ரம், எதிரிகளால் எப்படி கையாளப்படு கிறார் என்பதை, திரில்லர் தன்மை குறைந்துவிடாமல் விரைவாக நகர்த்திக்கொண்டுபோன விதமும் நச்!
நரைத்த தாடி, உடல் முழுவதும் டாட்டூ என நடுத்தர வயதில் வரும் விக்ரம் பேசும் வசனங்கள் மிகமிக சொற்பம். ஆனால், ஆக்சனில் அதகளம் செய்கிறார். பாத்திரப் படைப்புக்காக வழக்கம் போல உடலளவிலும் மெனக் கெட்டிருப்பதை அவரது புஜ பராக்கிரமங்கள் காட்டுகிறது.
நாயக பிம்பத்தை தூக்கிப் பிடிப் பதற்காக தேவையற்ற சாகசங் களை திணிக்காமல் விட்டதற்கு இயக்குநரைப் பாராட்டலாம்.
ஜூனியர் டாக்டராக வரும் அபி ஹசன் நல்ல அறிமுகம். விக்ரமை விட இவருக்கான காட்சிகள்தான் அதிகம். மனைவி மீதான காதல், அவரைத் தேடி அலையும் பரி தவிப்பு இரண்டையும் உணர்ந்து உள்வாங்கி செய்திருக்கிறார். ஆனாலும், அவர் செய்யும் அதிரடி சாகசங்கள் அவரது ‘அப்பாவி’ முகத்துக்கு ஒட்டாமல் சண்டித்தனம் செய்கிறது.
தொடக்கத்திலும், இறுதியிலும் மட்டுமே வந்தாலும் அக்சரா ஹாசன் கவனிக்க வைக்கிறார். அதிலும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் இறுதிக் காட்சியில் குட்டி 16 அடி பாய்கிறது.
போலீஸ் அதிகாரிகளாக வரும் லீனா, மீரா மிதுன், ஜாஸ்மின், சித்தார்த்தா, செர்ரி, வில்லன் போலீஸ் விகாஸ் இவர்களது நடிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
ஒரு டாக்டர், மலேசிய போலீ ஸின் கண்ணில் மண்ணைத் தூவி செய்கிற காரியங்கள்; காவல்துறை தலைமை அலுவலகத்துக்குள் விக்ரம், அபி இருவரும் புகுந்து ‘பென் டிரைவ்’ எடுப்பது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை.
இருந்தாலும் சீனிவாஸ் குதா வின் நேர்த்தியான ஒளிப்பதிவு, முன் பின்னாக நகரும் கதையை தெளிவாக தொகுத்த எடிட்டர் பிரவீன், ஜிப்ரானின் மிரட்டும் இசை இவையெல்லாம் சேர்ந்து ஒருவித படபடப்புக்கு எடுத்துச்சென்று காட்சிகளை நம்ப வைக்கிறது.
ஆனாலும், எதற்காக இந்த துரத்தல்? இதற்கு பின்னால் என்ன? என்பதற்கான விடைகளை இன்னும் தெளிவாக்கி, திரைக் கதையை பரபரக்க வைத்திருந் தால் இன்னும் கம்பீரமாக நின்றிருப் பான் ‘கடாரம் கொண்டான்’.