தமிழ் சினிமா

30 வருடங்களுக்கு முன்னாலேயே அனிமேஷன்: 'ராஜா சின்ன ரோஜா' பாடல் உருவானது எப்படி?

செய்திப்பிரிவு

இன்று 'லயன் கிங்' படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன், இதே ஜூலை மாதத்தில் வெளியான ஒரு தமிழ்படத்தில் கார்டூன் கதாபாத்திரங்கள் வந்து பலரை ஆச்சரியப்படுத்தியது.

அந்தப் படம், ரஜினிகாந்த், கவுதமி நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்த 'ராஜா சின்ன ரோஜா'. யானை, முயல், குரங்கு என, கிராபிக்ஸ் என்பது கோலிவுட்டுக்கே தெரியாத காலகட்டத்தில், பல மிருகங்கள் கார்டூன் வடிவத்தில் 'ராஜா சின்ன ரோஜா' பாடலில் இடம்பிடித்தன. இந்தப் பாடல் உருவான விதம் குறித்து பகிர்கிறார் படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

"அது ஒரு சவாலான அனுபவம். ஆனால் என்றும் நினைவில் இருக்கும் ஒரு படப்பிடிப்பாக இருக்கும். இதன் யோசனை ஏவிஎம் தரப்பிடமிருந்து வந்தது. குழந்தைகளும், ரஜினிகாந்தும் இருக்கும் படம் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிட்டார். அப்போதுதான் இது பற்றி யோசிக்க ஆரம்பித்தோம்.


'ராஜா சின்ன ரோஜா' படத்தில் ரஜினி, கவுதமி, சின்னி ஜெயந்த்

வைரமுத்து பாடலை எழுதினார். நாம் மிருகங்களுக்கு உதவினால் அவை நமக்கு உதவும் என்ற கருத்தை வைத்து அவரை எழுதச் சொன்னேன். எல்லோராலும் எளிதாகப் பாடக்கூடிய ஒரு மெட்டை இசையமைப்பாளர் சந்திரபோஸ் அமைத்தார். அப்படித்தான் 'ராஜா சின்ன ரோஜாவோடு...' பாட்டு பிறந்தது. ஆனால் பாடல் உருவானது பாதி வேலை முடிந்தது போலத்தான். அதை விடப் பெரிய சவால் அதை கார்டூன் கதாபாத்திரங்களுடன் படம் பிடிப்பதில் தான் இருந்தது. 

ஏவிஎம்மில் பாடலுக்காக பெரிய செட் போடப்பட்டது. ரஜினிகாந்த், கவுதமி மற்றும் குழந்தைகள் இருக்கும் அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர் 'புலியூர்' சரோஜா. இது சாதரணப் பாட்டு கிடையாது. மிருகங்கள் அனிமேஷனில் தோன்றவுள்ளதால் அதற்கேற்றார் போல விரிவாகத் திட்டமிட வேண்டியிருந்தது. 

படப்பிடிப்பில் நடிகர்கள் சரியாக நடிக்க வசதியாக 'புலியூர்' சரோஜாவும் அவரது உதவியாளர்களும், யானையாக, முயலாக நடிப்பார்கள். எல்லாம் கற்பனை தான். அங்கு யானை இருக்கும் என்று நினைத்து நடிக்க வேண்டும். 'புலியூர்' சரோஜா எல்லா மிருகங்கள் போலவும் நடித்துக் காட்டி குழந்தைகள் எளிதாக நடிக்க உதவிசெய்தார்.


எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த்

படப்பிடிப்புக்கு சில மாதங்கள் முன்னரே, மும்பையில் ராம்மோஹன் என்பவரைப் பார்க்க சென்றிருந்தேன். அவர்தான் அப்போது அனிமேஷனில் வித்தகர். அவருடன் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் ராம்மோஹன் கைவசம் நிறைய வேலைகள் இருந்தன. இது சாத்தியமற்றது என்றும், நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அவர் சொன்னார். நிறைய பேசி, மூன்று மாத காலம் அவகாசம் தருவோம் என்று உறுதியளித்து அவரை ஒத்துக்கொள்ள வைத்தோம். 

படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் வந்து பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தேன். மிருகங்களை உயிரோட்டத்துடன் அற்புதமாகக் கொண்டு வந்திருந்தார். கம்ப்யூட்டர் இல்லாத அந்த நாட்களில் நிறைய வரைந்தார். நிறைய கற்பனை செய்தார். 

ரஜினியுடன் 35 படங்களில் பணிபுரிந்திருந்தாலும் 'ராஜா சின்ன ரோஜா' என் மனதுக்கு நெருக்கமானது. அது மிகவும் சிக்கலான வேலை. ஆனால் செய்து முடித்தோம். இன்றும் மக்கள் அந்தப் பாடல் பற்றி பேசுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று சொல்லி முடிக்கிறார் எஸ்.பி.முத்துராமன்

- ஸ்ரீனிவாச ராமானுஜம், தி இந்து ஆங்கிலம் | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

SCROLL FOR NEXT