'கூர்கா' வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் மனோபாலா பேசிய போது... 
தமிழ் சினிமா

’எந்தப் படம் ஓடுது, ஓடலைன்னே தெரியலை!’ - மனோபாலா வேதனை

செய்திப்பிரிவு

எந்தப் படம் ஓடுகிறது, ஓடவில்லை எனத் தெரியவில்லை என்று 'கூர்கா' படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் மனோபாலா பேசினார்.

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, ரவிமரியா, ஆனந்த்ராஜ், மனோபாலா, ராஜ்பரத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கூர்கா'. 4 மங்கீஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாக போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் யோகி பாபுவை தவிர்த்து இதர படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா பேசும் போது, “படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதுதான் இப்போது மிகவும் கடினமாக உள்ளது. பட வெளியீட்டுக்கான குழுவே இல்லாமல் போய்விட்டது. இது எனது தயாரிப்பு, நான் எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்று நினைக்கிறார்கள்.

இந்த இக்கட்டான சூழலிலும் 'கூர்கா' படத்தை வாங்கி வெளியிட்டு, வெற்றிப்பெற வைத்த லிப்ரா நிறுவனத்துக்கு நன்றி. தொடர்ச்சியாக 5 படம், 10 படம் என வெளியாகிக் கொண்டே இருக்கிறது. எந்தப் படம் ஓடுகிறது, எந்தப் படம் ஓடவில்லை என்ற உண்மை தெரியாமலே இருக்கிறது. 

'கூர்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் யோகிபாபு மற்றும் நாய் இருப்பது போல் வெளியிடும் போதே, படத்தின் கதைக்களம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. சரியாக திட்டமிட்டு, யோகி பாபுவிடம் இரவில் கால்ஷீட் வாங்கி படமாக்கினார். என்னிடமும் அப்படியே வாங்கினார்கள். இரவு படப்பிடிப்பில் எப்போதுமே பங்கேற்க மாட்டேன். ஆனால், இயக்குநர் சாம் ஆண்டன், யோகி பாபு இருவருக்காகவும் தான் இந்தப் படத்தில் இரவு நடித்துக் கொடுத்தேன்.

சிம்பிளான கதைகள் வந்துக் கொண்டே இருந்தால், மக்களின் மனதில் இடம் பிடித்துவிடலாம். அழுத்தம் திருத்தமான கதைகள் இப்போது எடுக்க முடியுமா என்று தோன்றவில்லை. எங்களுடைய காலம் வேறு, ஆனால், இந்தக் காலத்தில் அது முடியுமா எனத் தெரியவில்லை. 'கூர்கா' சீரியஸான கதையாக இருந்தாலும், அதிகமாக காமெடி சேர்த்து படமாக்கி வெற்றியைக் கொடுத்திருக்கிறார் சாம் ஆண்டன்.

எங்களுடைய காலத்தில் ஒரு படம் தோல்வியடைந்தால், கதைதான் தவறு எனக் கூறுவார்கள். இயக்குநரை ஒதுக்கவே மாட்டார்கள். ஒரு வருடத்தில் அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர் என்று ஒரு வருடம் விருது வாங்கினேன். அந்த ஆண்டு 6 படங்களை இயக்கினேன். அதெல்லாம் இப்போது பண்ண முடியாது. ஒரு படம் முடிந்து, திரைக்கு கொண்டு வருவதே பெரும்பாடாக இருக்கிறது.

நடிகர்களும் ஒரு படத்தை முடித்துவிட்டு தான், அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார்கள். ரஜினி சார் ஒருமுறை "ஏன் ஒரு படம் முடித்து அடுத்த படத்துக்குப் போறாங்க. அடுத்தடுத்து போக வேண்டியது தானே?. ஒரு வருஷம் நான் 18 படம் ஹீரோவா நடிச்சேன் தெரியுமா" என்று கேட்டார். இப்போது ப்ரேம் பெரிதாகிவிட்டது சார். அனைத்துமே பெரிய வியாபாரம், ஆகையால் நிறுத்தி நிதானமாக பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்று பதிலளித்தேன்” என்று பேசினார் மனோபாலா.

SCROLL FOR NEXT