பிகில் 
தமிழ் சினிமா

அடுத்தடுத்து லீக்காகும் ‘பிகில்’ பாடல்கள்: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

செய்திப்பிரிவு

விஜய் நடித்துவரும் ‘பிகில்’ படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து லீக்காவதால், அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிவரும் இந்தப் படத்தை, ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் மூன்றாவது படம் இது.
இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். கால்பந்து விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்காகத் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார்.
வருகிற தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. வருகிற 25-ம் தேதி டெல்லியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இணையத்தில் கள்ளத்தனமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து விஜய் ரசிகர்கள் மீள்வதற்குள், விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடலின் குறிப்பிட்டப் பகுதியும் இணையத்தில் கள்ளத்தனமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி அடுத்தடுத்து ‘பிகில்’ படத்தின் பாடல்கள் வெளியாவதால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

SCROLL FOR NEXT