'சாஹோ' வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதால், 'காப்பான்' படத்தின் வெளியீட்டுத் தேதியும் மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. ஆகஸ்ட் 15-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி முடியாத காரணத்தால், ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இறுதிக்கட்டத்தில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்ட படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழில் சூர்யா, சயிஷா சைகல், ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காப்பான்'. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்குப் பிறகு தெலுங்கில் சூர்யாவின் படங்களுக்கு பெரிய வியாபாரம் இருக்கிறது. 'சாஹோ' வெளியாகும் அதே தேதியில் 'காப்பான்' வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால், 'காப்பான்' படம் தெலுங்கில் 'பந்தோபஸ்த்' என்ற பெயரில் வெளியாகிறது. அதன் பொருட்செலவுக்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும். இதனால் கண்டிப்பாக தெலுங்கு வெளியீடு மாற்றப்படும்.
இரண்டு மொழிகளிலும் ஒரே தேதியில் வெளியிடலாம் என்ற ஆலோசனையில், புதிய தேதியைத் தேர்வு செய்ய ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே போல், ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீட்டிலிருந்து 'சாஹோ' பின்வாங்கியிருப்பதால், அந்தத் தேதியில் வெளியிட பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.