சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் வில்லனாக இந்தி நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'mr.லோக்கல்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ஹீரோ'. 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடித்து வருகிறார். அவர் தமிழில் அறிமுகமாகும் படம் இது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கி நடைபெற்றது. இதனிடையே இந்தப் படத்தின் வில்லனாக அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
தற்போது 'ஹீரோ' படத்தின் வில்லனாக இந்தி நடிகர் அபய் தியோல் நடித்து வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
'ஹீரோ' படத்துக்கு இடையே, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படம், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படம், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.