தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8-ம் தேதி 'நேர்கொண்ட பார்வை' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'நேர்கொண்ட பார்வை'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தணிக்கைப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். முதலில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்கள். ஆனால், தற்போது 2 நாட்கள் முன்பாக ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிட முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
'பிங்க்' இந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ’நேர்கொண்ட பார்வை’. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.