'மாரி' படத்துக்கு இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட சிக்கலால், தனுஷ் ஒரு கணிசமான தொகையை விட்டுக் கொடுத்து படம் வெளியாகி இருக்கிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மாரி'. அனிருத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஜூலை 16ம் தேதி படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு ரகசிய குறியீட்டு எண் அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்ட போது சிக்கல் எழுந்தது. 'புலி வால்', 'சண்டமாருதம்' உள்ளிட்ட படங்களின் பாக்கி பணத்தை தந்தால் மட்டுமே 'மாரி' வெளியிடுவோம் என்று ஒரு சில விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
இதனால் ரகசிய குறியீட்டு எண் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. வெளிநாடுகளில் முதல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இறுதியில் தனுஷ் ஒரு கணிசமான தொகையை கொடுத்து, அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து அதிகாலை பிரச்சினை முடிவுக்கு வந்தது.
ஏற்கனவே, தொலைக்காட்சி உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த போது உரிமத்தை தனுஷே எழுதி வாங்கி வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.