ஆபாச வீடியோ பதிவு தொடர்பாக நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என நடிகை ஆஷா சரத் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர் ஆஷா சரத். மலையாளத்தில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் தான் 'பாபநாசம்' என்பது குறிப்பிடத்தக்கது.
'பாபநாசம்' படத்தில் ஆஷா சரத் நடிப்பைப் பார்த்து 'தூங்காவனம்' படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார் கமல்.
சில நாட்களாக ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ என்ற வாசகங்களுடன் வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்டு வந்தது. இதை மறுத்தும் விஷயமிகளைக் கண்டித்தும் ஆஷா சரத் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறும்போது, "சிக்கலான நேரத்தில் என்னை ஆதரித்த, அக்கறை செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. உங்களுக்கு எனது இதயப்பூர்வ நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சில தீய சக்திகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த முறையற்ற, தரக்குறைவான படங்களையும், பதிவுகளையும் பார்த்து அதிர்ச்சியுற்றேன்.
ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்க வேலை செய்யும் இப்படிப் பட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். இதனால் கொச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளேன். இதைத் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி. தற்போது மாநிலத்தின் சைபர் போலீஸ் பிரிவு இந்த வழக்கை விசாரித்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் இருக்கக் கூடாது என நான் நம்புகிறேன். எனவே இந்த வழக்கு முடிந்து நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன். பெண்களை மதிக்க வேண்டும், இழிவுபடுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் கைகோக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார் ஆஷா சரத்