சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் 'வாலு' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 17ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில், 'வாலு' படத்தின் வெளியீட்டிற்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. அதில் "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே என்னைத் தவிர வேறு நபர் மூலமாக 'வாலு' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு இன்று (ஜூலை 8) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது 'வாலு' தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை 'வாலு' திரைப்படம் வெளியிட தடை விதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. MAGIC RAYS சார்பாக வழக்கறிஞர் என். ரமேஷ் வாதாடினார்.