தமிழ் சினிமா

நடிகர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக் கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தர விடக் கோரியும் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, பதில் மனு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு, நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராதாரவி மேல்முறை யீடு செய்தார். ‘சங்கத்தின் செயற் குழு முடிவின்படிதான் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் சங்கம், தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975-ன்படி பதிவு செய்யப்பட்டதாகும். சங்க உப விதிகளின்படி செயற்குழுவும், நிர்வாகக் குழுவும் ஒன்றுதான். தேர் தலுக்கான அறிவிப்பு வெளியிட பொதுச்செயலாளரான எனக்கு உரிமை உள்ளது. சங்க உப விதி களில் திருத்தம் கொண்டுவந்த பிறகுதான் தேர்தலில் போட்டியிடு வதற்கான தகுதி 5 ஆண்டுகள் என்பது 7 ஆண்டுகளாக உயர்த்தப் பட்டது. உறுப்பினர்களின் ஒருமித்த அனுமதி அடிப்படையில்தான் இதற் கான திருத்தம் செய்யப்பட்டது. இதுபோன்ற விஷயங்களை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மேல்முறை யீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோ ரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நடிகர் சங்க உப விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், உறுப்பினர் சேர்க்கையின் உண்மைத்தன்மை, உறுப்பினர்கள் பட்டியல் வழங்கப்படாதது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவ்வழக்கில் எழுப்பப்பட்டுள்ளன. நடிகர் சங்கத் தேர்தல் சுதந்திர மாகவும், நேர்மையாகவும் நடப் பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே நோக்கம். தேர்தல் பார்வையாளரை நியமிப்பது உட்பட சில சர்ச்சைக்குரிய அம்சங்களைப் பார்க்கும்போது வழக்கு விசாரணையின்போது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

எனவே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். உறுப்பினர்களின் விவரங்கள் சரிபார்ப்பு, நிர்வாகம் மற்றும் செயற்குழு பற்றி சங்க உப விதிகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது போன்ற விஷயங்களில் நீதிமன்றத்துக்கு கூட்டுறவு சங்கப் பதிவாளர் உதவ வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகும்போது நடிகர் சங்க உப விதிகள் குறித்து அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த தேர்தலைப் பொறுத்தவரை தனி நீதிபதியின் உத்தரவில் நாங்கள் உடன்பட்டாலும், நடைமுறை தீர்வு காண விரும்புகிறோம். அப்போதுதான் தேர்தலை நடத்த முடியும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கள், வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT