தமிழ் சினிமா

நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னையில் நடந்த, ‘உயிரே உயிரே’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளம் நடிகர்களை, நடிகை ராதிகா விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என திரைப்பட இயக்குநர் ராஜசேகர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோட்டில் திரைப்பட இயக்குநர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நான் இயக்கி வரும், ‘உயிரே உயிரே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகை ராதிகா பேசும்போது, “இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. வானத்தை பார்த்து மேலே எச்சில் துப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

ஒரு படத்தின் விழா மேடையில் அந்த நடிகர், நடிகைகளை பற்றியோ, அதில் பணிபுரியும் டெக்னீசியன் பற்றியோதான் பேச வேண்டும். ஆனால், அரசியல் நோக்கில் நடிகர் சங்க பிரச்சினையை மறைமுகமாக ராதிகா பேசியதுகண்டிக்கத்தக்கது.

இளம் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளனர். ஒருவருக்கு ஒரு கதை செட் ஆகவில்லை என்றால், அந்த கதைக்கு யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவர்களுக்கு மற்ற இளம் நடிகர்கள் சிபாரிசு செய்கின்றனர். அந்த அளவுக்கு இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.

மூத்த நடிகர்கள் அனைவரும் இளம் நடிகர்களுக்கு வழிவிட வேண்டும். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாதான் பொக்கிஷம் என மோகன்பாபு தெரிவித்தார். அப்படி இருக்கையில் இதுபோன்ற தவறான கருத்தை ராதிகா தெரிவித்தது நாகரிகமற்றது. இவ்வாறு ராஜசேகர் கூறினார்.

SCROLL FOR NEXT