தமிழ் சினிமா

ரம்ஜான் ரேஸில் சிம்புவின் வாலு, தனுஷின் மாரி

ஸ்கிரீனன்

சிம்பு நடித்திருக்கும் 'வாலு', தனுஷ் நடித்திருக்கும் 'மாரி' ஆகிய இரண்டு படங்களுமே ஜூலை 17ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக 'வாலு' படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது. இறுதியாக சிம்புவின் பிறந்தநாளான அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது 'வாலு' படத்தை டி.ஆர் வாங்கி வெளியிட இருக்கிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரிட்டு ஜுலை 17 முதல் உலகமெங்கும் என்று இன்று விளம்பரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை சிம்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் மூன்றாவது படம் 'மாரி'. தனுஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும், மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து 'மாரி' திரைப்படத்தைத் தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தை ஜூலை 17ம் தேதியும் வெளியிட தீர்மானித்திருப்பதாக தயாரிப்பாளர்களில் ஒருவரான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்து சிம்பு, தனுஷ் ஆகிய இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT