தமிழ் சினிமா

தமிழில் ரீமேக்காகும் ஜாலி எல்.எல்.பி

ஸ்கிரீனன்

'ஜாலி எல்.எல்.பி' இந்தி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

'மான் கராத்தே' இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கெத்து' என்னும் பெயரிடப்பட்டு இருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஏமி ஜாக்சன், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை உதயநிதி தயாரித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து 'என்றென்றும் புன்னகை' அஹ்மத் இயக்கவிருந்த படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தார். ஹன்சிகா நாயகி, அனிருத் இசை, மதி ஒளிப்பதிவு என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்கள்.

ஆனால், படத்தின் இரண்டாம் பகுதி அமெரிக்காவில் நடைபெறுவது போன்று கதை அமைந்திருந்தால் பட்ஜெட் அதிகமாகும் என அப்படத்தை கைவிட்டு விட்டார்கள்.

அப்படத்திற்கு பதிலாக இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஜாலி எல். எல்.பி' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. போமன் இரானி வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அர்ஷத் வர்ஷி வேடத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறார்.

ஜாலி எல்.எல்.பி சிறு குறிப்பு:

கடந்த 2013-ல் இயக்குநர் சுபாஷ் கபூர் எழுதி, இயக்கிய படம் ஜாலி எல்.எல்.பி. அர்ஷத் வார்ஸி, போமன் இரானி மற்றும் அமிர்தா ராவ் ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் கதை முற்றிலும் நீதிமன்ற பின்னணியில் நடப்பது தான். 6 அப்பாவி தொழிலாளர்களின் நலனுக்காக வாதாடும் வழக்கறிஞர் ஜகதீஷ் தியாகி ஜோலி.

பணக்கார முதலாளிகள் சட்டத்தை கைக்குள் வைத்துக்கொள்ள ஊழல் தந்து நிறைவேற்ற நினைக்கும் காரியங்களை வழக்கறிஞர் ஜகதீஷ் தியாகி ஜோலி எப்படி முறியடிக்கிறார், அப்பாவி தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க செய்தாரா? என்பதை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் சொன்ன படம் தான் இது. 1999-ல் நடந்த சஞ்ஜீவ் நந்தா விபத்து வழக்கை ஆக்கமாக கொண்டும் தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம்.

SCROLL FOR NEXT