பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் மீண்டும் துவங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
'பரதேசி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா, சசிகுமாரை நாயகனாக்கி ஆரம்பித்த படம் 'தாரை தப்பட்டை'. வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்து வரும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். சசிகுமாருக்கு தங்கச்சியாக பிரகதி நடித்து வருகிறார்.
சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது, சசிகுமாருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
விபத்து குறித்து படக்குழு, "நடிகர் சசிகுமார் வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தனர்.
அதிரடியான சண்டைக்காட்சி தொடர்ச்சியின் போது நடிகர் சசிகுமார் சற்றும் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானார். அவரது இடது கை எலும்பு முறிந்தது. சிறிது காலம் ஒய்வெடுக்கும்படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படபிடிப்பை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது" என்று அறிவித்திருந்தார்கள். சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படபிடிப்பு துவங்கும் என்று படக்குழு தெரிவித்தது.
ஆனால், தொடர்ச்சியாக சசிகுமார் சிகிச்சை மேற்கொண்டு வந்ததால் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், சசிகுமார் உடல்நிலை சரியாகிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பை இம்மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
முதலில் ஹைதராபாத், கோவா அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் என ஒரே கட்டமாக முழுப் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.