தமிழ் சினிமா

ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்: ஹன்சிகா நேர்காணல்

கா.இசக்கி முத்து

தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் ஒன் நடிகை என்று ஹன்சிகாவை கூறலாம். ‘அரண்மனை’யில் பேய், ‘ரோமியோ ஜூலியட்டில்’ அழகான காதலி, ‘புலி’யில் ராஜா காலத்து வேடம் என்று படத்துக்கு படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை கவரும் ஹன்சிகாவை சமீபத்தில் சந்தித்தோம்.

“நான் நடிகையாகாமல் இருந்தால் விமானப் பணிப்பெண்ணாக ஆகியிருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ நான் விமானப் பணிப்பெண்ணாக நடித்தால் அப்படம் கண்டிப்பாக வெற்றியடைந்து விடுகிறது. எனக்கும் அந்தப் பாத்திரமே தொடர்ந்து கிடைக்கிறது” என்றபடி பேசத் தொடங்கினார் ஹன்சிகா. மேலும் அவருடன் பேசியதிலிருந்து..

‘புலி’ படம் எப்படி வந்திருக்கிறது?

மிக நன்றாக வந் திருக்கிறது. 2015-ம் ஆண்டின் பிரம் மாண்டமான படமாக ‘புலி’ இருக்கும். இதில் நான் அரசியாக நடித்திருக்கிறேன். அதற்கான உடைகளோடு, மேக்கப் போட்டு நடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நான் படப்பிடிப்புக்கு தயாராக மூன்றரை மணி நேரமாகும். அந்த படம் வெற்றியடைந்து அதற்காக நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் போக்கும் என்று நம்புகிறேன்.

விஜய்யுடன் மீண்டும் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

நான் விஜய்யைப் பார்க்கும்போதெல்லாம், “இப்படி இளமையாகிக்கொண்டே போகிறீர்களே... என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்பேன். ‘புலி’ நான் அவருடன் நடிக்கும் இரண்டாவது படம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

அழகான காதலி, அரசி, பேய் என்று அடுத்தடுத்து வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். குறிப்பாக சுந்தர்.சி என்னை ஒவ்வொரு முறை தனது படத்துக்கு அழைக்கும்போதும் வித்தியாசமான வேடங்களாகத் தருவார். அதனால் ஒவ்வொரு முறையும் அவர் கதை சொல்லும் போது, அந்த பாத்திரத்துக்கு படத்தில் எவ்வளவு காட்சிகள் இருக்கிறது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒப்புக்கொள்வேன்.

மேலும் 3 குழந்தைகளை தத்தெடுக்கப் போகிறீர்களாமே?

நான் ஏற்கனவே 5 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். இதுபோன்ற செய்திகள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். நடிகர்கள் விளம்பரத்துக்காக இப்படி பண்ணுகிறார்கள் என்று சொல்வார்களே என்ற பயம்தான் இதற்கு காரணம். ஆனாலும் இதுபோன்ற செய்திகள் எப்படியாவது வெளியே வந்துவிடுகிறது. நான் எனது மன சந்தோஷத்துக்காக இதைச் செய்கிறேன். மற்றபடி விளம்பரத்துக்காக பண்ணவில்லை. எனவே அதைப் பற்றி விரிவாக பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடைவதில்லையே?

‘அரண்மனை’ படம் பெண்களை மையப்படுத்திய படம்தானே? அப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் உறுதியானவை. எனது கதாபாத்திரம் 20 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அதன் வலிமை படம் முழுவதும் இருக்கும். ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘36 வயதினிலே’ படமும் வெற்றி பெற்றுள்ளதே. எனவே பெண்களை மையப்படுத்திய படங்கள் இங்கும் வெற்றியடையும் என்பது என் கருத்து.

திரையுலகில் உங்களுக்கு நெருங்கிய நண்பர் யார்?

ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சுந்தர் சார் மற்றும் குஷ்பு மேடம் இருவருமே எனக்கு நெருக்கமானவர்கள்தான். அவர்களைப் போல் எனக்கு வேறு பல நண்பர்கள் இருக்கிறார்கள் .

ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள் வீர்களா?

ரஜினியுடன் நடிக்கமாட்டேன் என்று யார்தான் சொல்வார்கள்? ரஜினி பட வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன்.

SCROLL FOR NEXT